
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கும் அத்தொடரின் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்குகிறது. முன்னதாக 2007 முதல் இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடும் டெஸ்ட் தொடர் பட்டோடி கோப்பை என்றழைக்கப்பட்டு வந்தது.
முன்னாள் இந்திய வீரர்கள் இப்திகார் அலிகான் பட்டோடி மற்றும் அவருடைய மகன் மன்சூர் அலிகான் பட்டோடி ஆகியோர் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 நாட்டின் கிரிக்கெட்டுக்கும் நிறைய பங்காற்றியுள்ளனர். அவர்களுடைய நினைவாக பட்டோடி கோப்பை நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது அந்தக் கோப்பைக்கு ஓய்வு கொடுத்துள்ள இங்கிலாந்து வாரியம் ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் அதிக ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார். மறுபுறம் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக உலக சாதனை படைத்துள்ளார். அவர்கள் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய டாப் 2 வீரர்களாகவும் ஜொலிக்கிறார்கள்.
எனவே இனிமேல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியாவின் டெஸ்ட் தொடர்கள் அவர்களுடைய பெயரில் அழைக்கப்படும் என்று அந்நாட்டு வாரியம் அறிவித்தது. அதற்கான பிரத்தியேக கோப்பையை முதல் போட்டிக்கு முன் சச்சின் மற்றும் ஆண்டர்சன் அறிமுகப்படுத்தி பேசினார்கள். இந்நிலையில் கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவரான சச்சினுடன் ஒரு கோப்பையில் தம்முடைய பெயரும் இருப்பது நம்ப முடியாதது என்று ஆண்டரசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “உங்கள் பெயரில் ஒரு கோப்பை இருப்பது பெரிய அவசியமில்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரை கிரிக்கெட்டில் இதுவரை வாழ்ந்த மகத்தான வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கருடன் ஒரு கோப்பையில் என்னுடைய பெயரும் இருப்பதைப் பார்ப்பது இவ்வுலகில் இடமில்லாததைப் போன்ற உணர்வைத் தருகிறது”
இதையும் படிங்க: 15.3 ஓவரில் 112 ரன்ஸ்.. புதிதாக வந்தும் பழைய கேரக்டர் மாறாமல் சொதப்பிய பாகிஸ்தான்.. வங்கதேசம் வெற்றி
“சச்சினை நான் மிகவும் உயர்வாக கருதுகிறேன். குழந்தையாக அவரைப் பார்த்துள்ளேன். அவருக்கு எதிராகவும் விளையாடியுள்ளேன். தன்னுடைய கேரியர் முழுவதும் இந்திய நாட்டின் சுமையை தோளில் சுமந்த அவர் ஐக்கானிக் கிரிக்கெட்டர். எனவே அவரைப் போன்ற ஒருவருடன் பெயரை பகிர்ந்து கொள்வது எனக்கு மிகப்பெரிய கௌரவமாகும்” என்று கூறினார்.