வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. சமீப காலங்களில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தது. அதனால் பாகிஸ்தான் வாரியம் நட்சத்திர வீரர்களை கழற்றி விட்டு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருங்காலத்தை வளமாக்க முடிவெடுத்துள்ளது.
அதன் காரணமாக பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி ஆகிய நட்சத்திர வீரர்களை பாகிஸ்தான் வாரியம் கழற்றி விட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக இத்தொடரில் சல்மான் ஆகா தலைமையில் இளம் வீரர்களை பாகிஸ்தான் அணி களமிறக்கியுள்ளது. அதனால் பாகிஸ்தான் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்தொடரின் முதல் போட்டி ஜூலை 20ஆம் தேதி வங்கதேசத்தின் தலைநகர் தாக்காவில் நடைபெற்றது.
மாறாத ரன் அவுட்:
இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு அனுபவ வீரர் ஃபகார் ஜாமான் அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் சாய்ம் ஆயுப் 6, முகமது ஹாரிஸ் 4, கேப்டன் சல்மான் ஆகா 3, ஹசன் நவாஸ் 0, முகமத் நவாஸ் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
இருப்பினும் மறுபுறம் அசத்திய ஜமான் அரை சதத்தை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது ரகுமான் வீசிய 13வது ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட குஸ்தில் ஷா டபுள் எடுக்க முயற்சித்தார். அவரை நம்பி ஜமானும் 2வது ரன் எடுக்க ஓடினார். அதற்குள் வங்கதேச வீரர் பந்தை எடுத்ததைப் பார்த்த குஸ்தில் தம்முடைய விக்கெட்டை பாதுகாப்பதற்காக 2வது ரன்னை பாதியிலேயே நிறுத்திக் கொண்டார்.
பரிதாப தோல்வி:
மறுபுறம் அவரை நம்பி பாதி தூரம் ஓடிய ஜமான் 44 (34) ரன்களில் ரன் அவுட்டானார். கடந்த காலங்களில் இது போல பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பலமுறை ரன் அவுட்டாகியுள்ளார்கள். அதே போல இப்போட்டியில் ஜமான் அவுட்டானதை பார்த்த ரசிகர்கள் பாகிஸ்தான் அணி புதிதாக மாறினாலும் பழைய ரன் அவுட்டாகும் ஸ்டைல் மாறவில்லை என்று சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் குஷ்தில் ஷா 17, அப்பாஸ் அப்ரிடி 22 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இறுதியில் 19.3 ஓவரில் 110 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக வங்கதேசத்திடம் ஆல் அவுட்டாகி அவமான சாதனை படைத்தது. வங்கதேசத்திற்கு அதிகபட்சமாக முஸ்தஃபிசுர் ரஹ்மான் 2, டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க: 2031 வரை இந்தியா வெய்ட் பண்ணுங்க.. இங்கிலாந்துக்கு அள்ளிக் கொடுத்த ஐசிசி.. வெளியான அறிவிப்பு
அடுத்து விளையாடிய வங்கதேசம் சிறப்பாக பேட்டிங் செய்து 15.3 ஓவரிலேயே 112/3 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பர்வேஸ் ஹொசைன் 56* (39), டௌஹித் ஹ்ரிடாய் 36 ரன்கள் எடுத்து 1 – 0* (3) என்று கணக்கில் முன்னிலை பெற உதவினார்கள். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சல்மான் மிர்சா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.



