
பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நவம்பர் 22ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா சுமாராக பேட்டிங் செய்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. மிட்சேல் ஸ்டார்க் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் கேஎல் ராகுல் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்தார்கள்.
நேரம் செல்ல செல்ல மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த அவர்கள் 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்தார்கள். அதில் ராகுல் நங்கூரமாக விளையாடி அரை சதம் அடித்து 77 ரன்கள் குவித்து அவுட்டானார். மறுபுறம் அவரை விட அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதம் அடித்து 161 ரன்கள் குவித்து அசத்தினார்.
அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய தனது முதல் போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற மாக் பட்டோடியின் சாதனையை உடைத்து ஜெய்ஸ்வால் புதிய வரலாறு படைத்தார். அந்த பட்டியல்:
1. யசஸ்வி ஜெய்ஸ்வால்: 161, பெர்த்
2. மாக் பட்டோடி: 160, மெல்போர்ன்
3. முரளி விஜய்: 152, அடிலெய்ட்
அத்துடன் ஆஸ்திரேலியாவில் ஒரு போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகியும் 2வது இன்னிங்ஸில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்தார். இதற்கு முன் 1977ஆம் ஆண்டு ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மட்டுமே அந்த சாதனையை படைத்திருந்தார். மேலும் சச்சின் டெண்டுல்கருக்கு பின் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த இரண்டாவது இளம் இந்திய துவக்க வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்தார்.
இதையும் படிங்க: முதல் 15 போட்டிகளிலேயே இப்படி ஒரு இமாலய ரன் குவிப்பா? அசத்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் படிக்கல் 25, ரிஷப் பண்ட் 1, துருவ் ஜுரேல் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். இருப்பினும் விராட் கோலி 40*, வாஷிங்டன் சுந்தர் 14 ரன்கள் எடுத்துள்ளார்கள். அதனால் மூன்றாவது நாள் தேனீர் இடைவெளியில் 359-5 ரன்கள் குவித்துள்ள இந்தியா 405 ரன்கள் முன்னிலை பெற்று இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.