11 ஓவரில் 144 ரன்களை எரிமலையாக சேசிங் செய்த ஜெகதீசன், இயற்கையால் தமிழக வெற்றியை பறித்த ஹைதெராபாத் கேப்டன்

Jagadeesan Ranji
- Advertisement -

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சி கோப்பையின் 2022 – 23 சீசன் கோலாகலமாக துவங்கிய நடைபெற்று வருகிறது. அத்தொடரில் டிசம்பர் 13ஆம் நடைபெற்ற லீக் போட்டியில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் பிடித்திருந்த ஹைதராபாத் மற்றும் தமிழ்நாடு ஆகிய அணிகள் மோதின. ஹைதராபாத் நகரில் இருக்கும் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் முதல் இன்னிங்ஸில் 395 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் டன்மை அகர்வால் சதமடித்து 135 ரன்களும் மிக்கில் ஜெய்ஸ்வால் 137* ரன்களும் எடுக்க தமிழ்நாடு சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக சந்திப் வாரியர் 5 விக்கெட்களை எடுத்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு 204 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே மிரட்டிய தமிழக ஓப்பனிங் ஜோடியில் அதிரடி காட்டிய ஜெகதீசன் 16 பவுண்டரி 3 சிக்ஸருடன் சதமடித்து 116 (97) ரன்களில் அவுட்டானார். அவருடன் தனது பங்கிற்கு அபாரமாக பேட்டிங் செய்த சாய் சுதர்சன் 18 பவுண்டரி 1 சிக்ருடன் சதமடித்து 179 (274) ரன்கள் விளாசினார். அவர்களுக்குப் பின் கவின் 36 ரன்களில் அவுட்டானாலும் பாபா அபாரஜித் கடைசி வரை அவுட்டாகாமல் சதமடித்து 115* (165) ரன்களும் பாபா இந்திரஜித் 48 (52) ரன்களும் எடுத்ததால் தமிழகம் தனது முதல் இன்னிங்ஸில் 510/4 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

- Advertisement -

வெறித்தன சேசிங்:
அதை தொடர்ந்து 115 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை துவங்கிய ஹைதராபாத் தமிழகத்தின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக தனை தியாகராஜன் 69 ரன்கள் எடுக்க தமிழகம் சார்பில் அதிகபட்சமாக ஸ்பின்னர் சாய் கிசோர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆனால் அதற்குள் கடைசி நாள் வந்து விட்டதால் 4வது நாளின் கடைசி மணி நேரத்தில் தமிழகம் வெற்றி பெற 11 ஓவர்களில் 144 ரன்கள் தேவைப்பட்டது. அதை எப்படியாவது எட்டிப் பிடித்து வெற்றி பெற்று விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கிய தமிழக வீரர்களில் தற்போது நல்ல பார்மில் இருக்கும் ஜெகதீசன் வெறித்தனமாக சிக்ஸர்களை பறக்க விட்டார்.

அவருக்கு ஈடு கொடுத்த மற்றொரு தொடக்க வீரர் சாய் சுதர்சன் தனது பங்கிற்கு 5 சிக்ஸர்களை பறக்க விட்டு 93 ரன்கள் அதிரடி ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்து 42 (21) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அவருக்குப் பின் அதிரடியை தொடர்ந்த ஜெகதீசன் 8 சிக்சர்களை பறக்க விட்டு வெறும் 20 பந்துகளில் அதிவேகமான சதமடித்து 59* (22) ரன்களை விளாசினார். அவரது போராட்டத்தால் 7 ஓவர்களிலேயே தமிழகம் 108/1 ரன்களை எடுத்த தமிழகம் வெற்றியை நெருங்கியது.

- Advertisement -

ஆனால் அந்த சமயத்தில் வெளிச்சம் குறைவாக இருக்கிறது என்று நடுவரிடம் புகார் தெரிவித்த ஹைதராபாத் கேப்டன் டன்மை அகர்வால் மேற்கொண்டு தங்களால் பந்து வீச முடியாது என்று கூறினார். அதைத் தொடர்ந்து நடுவரும் வெளிச்சத்தை ஆராய்ந்து குறைவாக இருந்ததால் இப்போட்டி டிராவில் முடிவதாக அறிவித்தார். இருப்பினும் அந்த தருணத்தில் சுழல் பந்து வீச்சாளர்களை கொண்டு எஞ்சிய ஓவர்களை நிச்சயமாக வீசியிருக்க முடியும். ஆனால் தங்களது அணியின் தோல்வியை தவிர்ப்பதற்காக ஹைதராபாத் கேப்டன் கையில் இருந்த கடைசி அஸ்திரத்தை பயன்படுத்தி இப்போட்டியை குறைந்தபட்சம் டிராவில் முடிவடைய வைத்தார்.

இதையும் படிங்க:  சொந்த பொருளை வைத்து பாகிஸ்தானை சாய்க்க இங்கிலாந்து பலே திட்டம் – 72 வருட புதிய வரலாற்று சாதனை படைத்த இளம் வீரர்

அந்த வகையில் அதிர்ஷ்டமின்மையால் வெற்றியை நெருங்கியும் தொட முடியாத தமிழகம் இப்போட்டி ட்ராவில் முடிந்ததால் ஏமாற்றமடைந்தது. அதே சமயம் தமிழகத்தின் வெற்றிக்காக உயிரைக் கொடுத்த போராடிய ஜெகதீசன் உள்ளிட்ட இளம் வீரர்களை தமிழக ரசிகர்கள் மனதார பாராட்டுகிறார்கள். இந்த போட்டி டிராவில் முடிந்ததால் அதற்காக 3 புள்ளிகளை பெற்ற தமிழகம் எலைட் குரூப் பி பிரிவில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து வரும் டிசம்பர் 20ஆம் தேதியன்று ஆந்திர பிரதேசத்தை தமிழகம் தன்னுடைய 2வது லீக் போட்டியில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement