சொந்த பொருளை வைத்து பாகிஸ்தானை சாய்க்க இங்கிலாந்து பலே திட்டம் – 72 வருட புதிய வரலாற்று சாதனை படைத்த இளம் வீரர்

Rehan Ahmed
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அடுத்ததாக பாகிஸ்தானுக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக 17 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ள இங்கிலாந்து முதலிரண்டு போட்டிகளில் அதிரடியான அணுகு முறையுடன் விளையாடி அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ளது. குறிப்பாக தார் ரோடு போல இருந்த ராவல்பிண்டி மைதானத்தில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து சுழலுக்கு சாதகமாக அமைந்த முல்தான் மைதானத்திலும் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைத்தது.

அதன் காரணமாக பாகிஸ்தான் வாரியமும் கேப்டன் பாபர் அசாம் உள்ளிட்ட வீரர்களும் உலக அளவில் கடுமையான விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்தனர். அது போக மோசமான பிட்ச் அமைத்ததால் கடுப்பான ஐசிசி ராவல்பிண்டி பிட்ச் சராசரிக்கும் குறைவாக இருந்ததாக மதிப்பிட்டு ஒரு கருப்பு புள்ளியையும் தண்டனையாக வழங்கியது பாகிஸ்தான் வாரியத்திற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

- Advertisement -

அதனால் 22 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்துள்ள இங்கிலாந்து 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியுடன் இத்தொடரை கைப்பற்ற புதிய திட்டத்தை வகுத்துள்ளது. அதாவது டிசம்பர் 17ஆம் தேதியான இன்று கராச்சியில் துவங்கிய 3வது மற்றும் கடைசிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக இளம் வீரர் ரெஹன் அஹமத் அறிமுகமானார். அவரது பெயரை பார்த்ததுமே பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளலாம்.

பாகிஸ்தான் பொருள்:
ஆம் பாகிஸ்தானில் பிறக்கவில்லை என்றாலும் பாகிஸ்தானில் பிறந்து இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்த குடும்பத்தில் பிறந்த இளம் ஆல் ரவுண்டரான அவர் கடந்த 2021 முதல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். லீசெஸ்டர்ஷைர் அணிக்காக கவுண்டி தொடரில் விளையாடி வரும் அவர் இதுவரை 3 முதல் தர போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும் 7 லிஸ்ட் ஏ போட்டிகளில் 5 விக்கெட்களையும் 9 டி20 போட்டிகளில் 31 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.

- Advertisement -

மேலும் பேட்டிங்கில் 195, 89, 100 என கணிசமான ரன்களை குவித்துள்ள அவர் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும் மிக விரைவாக இங்கிலாந்துக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதிலிருந்தே பாகிஸ்தானுக்கு எதிராக அதன் வம்சாவளியை சேர்ந்த பவுலரை பயன்படுத்தி சாய்க்கும் இங்கிலாந்தின் வித்தியாசமான திட்டம் இவரது அறிமுகத்திலிருந்து தெரிய வருகிறது. அதை விட வெறும் 18 வருடம் 126 நாட்கள் மட்டுமே நிரம்பியுள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்காக மிகவும் இளம் வயதில் விளையாடும் வீரர் என்ற பிரையன் கிளோஸ் 74 வருட சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:
1. ரெஹன் அஹமத் : 18 வருடம் 126 நாட்கள், பாகிஸ்தானுக்கு எதிராக, 2022*
2. பிரையன் கிளோஸ் : 18 வருடம் 149 நாட்கள், நியூசிலாந்துக்கு எதிராக, 1949
3. ஜேக் கிரவ்போர்ட் : 19 வருடம் 32 நாட்கள், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 1906
4. டெனிஸ் காம்ப்டன் : 19 வருடம் 83 நாட்கள், நியூசிலாந்துக்கு எதிராக, 1937
5. பென் ஹாலியோக் : 19 வருடம் 269 நாட்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 1997

- Advertisement -

கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அடங்கிய இங்கிலாந்து வீரர்களின் பாராட்டுக்கு மத்தியில் தனது அறிமுக தொப்பியை பெற்ற அவர் தனது தந்தையின் அரவணைப்புடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் 710வது இங்கிலாந்து வீரராக இப்போட்டியில் களமிறங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையும் படிங்க:  2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் ரோஹித் சர்மா இணைந்தால் வெளியேறப்போவது யார்? – விவரம் இதோ

அந்த அணிக்கு முகமது வாசிம் 253வது பாகிஸ்தான் வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்ப்பதற்காக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சற்று முன் வரை அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement