TNPL 2023 : நானும் பேட்ஸ்மேன் தான் என மிரட்டிய சாய் கிசோர் – திருப்பூர் பெரிய வெற்றி, திருச்சி லீக் சுற்றுடன் வெளியேறியதா?

- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் 2023 டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜூன் 25ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு சேலத்தில் இருக்கும் எஸ்சிஎஃப் மைதானத்தில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திருச்சி ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய திருப்பூர் அணிக்கு ஆரம்பத்திலேயே துஷார் ரஹீஜா 8 (7) ரன்களில் சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் நடராஜன் வேகத்தில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய இளம் வீரர் சாய் கிஷோர் அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

அதில் மற்றொரு தொடக்க வீரர் ராதாகிருஷ்ணன் சற்று நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் சரவெடியாக செயல்பட்ட சாய் கிஷோர் 12 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 4 பவுண்டரி 4 சிக்சருடன் 50 (24) ரன்களை 208.33 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்க விட்டு அவுட்டானார். குறிப்பாக சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான அவர் இதற்கு முன் பெரும்பாலும் பந்து வீச்சில் மட்டுமே அசத்திய நிலையில் இந்த போட்டியில் “நானும் பேட்ஸ்மேன் தான்” என்பதை நிரூபிக்கும் வகையில் அதிரடியாக செயல்பட்டு 2வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தன்னுடைய தரத்தை காண்பித்து பெவிலியன் சென்றார்.

- Advertisement -

அதிரடி வெற்றி:
அடுத்த ஓவரிலேயே 3 பவுண்டரி 2 சிக்சருடன் ராதாகிருஷ்ணன் 45 (42) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்ததாக வந்த அனுபவ வீரர் விஜய் சங்கர் – பாலச்சந்தர் அனிருத் ஆகியோர் ஜோடி சேர்ந்து திருச்சி பவுலர்களைப் பந்தாடினர். கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 4வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடியில் பாலச்சந்தர் அனிருத் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 51 (25) ரன்களும் விஜய் சங்கர் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 31* (18) ரன்களும் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர்.

திருச்சி சார்பில் அதிகபட்சமாக நடராஜன், சிலம்பரசன் ஆண்டனி தாஸ் மற்றும் மோனிஷ் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 202 என்ற கடினமான இலக்கை துரத்திய திருச்சிக்கு 3 பவுண்டரி 1 சிக்சருடன் 20 (8) ரன்கள் குவித்து மிரட்டிய கங்கா ஸ்ரீதர் ராஜுவை 2வது ஓவரில் அவுட்டாக்கிய புவனேஸ்வரன் அடுத்து வந்த மோனிசை கோல்டன் டக் அவுட்டாக்கி அசத்தினார். அதனால் ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை நிதானமாக விளையாடி காப்பாற்ற முயற்சித்த கே ராஜ்குமார் 4 பவுண்டரியுடன் 22 (21) ரன்களில் அவுட்டாக அடுத்த ஓவரிலேயே அடுத்ததாக வந்த ஆர் ராஜ்குமார் அவசரப்பட்டு 1 (4) ரன்னில் ரன் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

அதன் காரணமாக 70/4 என பின்னடைவை சந்தித்த அந்த அணியை நிதானமாக பேட்டிங் செய்து காப்பாற்ற போராடிய டார்ல் பெராரியோ 42 (40) ரன்களும் ஆண்டனி தாஸ் 25 (26) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அப்படி ஆரம்ப முதலே அதிரடியாக விளையாட தவறியதால் ரன் ரேட் அதிகரித்த சூழ்நிலையில் அந்த அணியின் வெற்றியும் கேள்விக்குறியானது. அந்த நிலையில் கடைசி நேரத்தில் ஜாபர் ஜமால் அதிரடியாக 4 சிக்ஸர்களை பறக்க விட்டு 30 (14) ரன்கள் எடுத்துப் போராடியும் 20 ஓவர்களில் திருச்சியால் 155/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட திருப்பூர் அணிக்கு அதிகபட்சமாக இளம் வீரர் புவனேஸ்வரன் 4 விக்கெட்டுகளும் பெரியசாமி மற்றும் அஜித் ராம் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்கும் எடுத்தனர். அதனால் 46 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்ற திருப்பூர் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 2வது வெற்றி பதிவு செய்து புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.

இதையும் படிங்க:மேகங்கள் இல்லனா டம்மி தான், ஜேம்ஸ் ஆண்டர்சனை விட நம்ம ஜஹீர் கான் தான் மகத்தானவர் – நட்சத்திர இந்திய வீரர் பாராட்டு

ஆனால் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் 4 தொடர் தோல்விகளை சந்தித்துள்ள திருச்சி ஆரம்பத்திலேயே கடைசி இடத்தை வலுவாக பிடித்துள்ளது. அதனால் எஞ்சிய போட்டிகளில் வென்றாலும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினமாக பார்க்கப்படுகிறது.

Advertisement