டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா போவது ரொம்ப கஷ்டம் – காரணத்தை கூறும் ஆகாஷ் சோப்ரா

Chopra
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை இந்தியா பதிவு செய்தது. மொஹாலியில் நடந்த அந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இலங்கையை பந்தாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5வது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து 1 – 0* என தொடரில் முன்னிலை பெற்றது.

INDvsSL

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பை அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டியில் மிகபெரிய வெற்றியை பெற்ற போதிலும் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் மட்டுமே உள்ளது. முதல் 4 இடங்களில் ஆஸ்திரேலியா (77.77% புள்ளிகள்), பாகிஸ்தான் (66.66% புள்ளிகள்), இலங்கை (60% புள்ளிகள்) மற்றும் தென்னாப்பிரிக்கா (60% புள்ளிகள்) ஆகிய அணிகள் உள்ளது. இந்தியா 54.16% புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
டி20 போட்டிகளின் வருகையால் அழிவின் பிடியில் சிக்க ஆரம்பித்த கிரிக்கெட்டின் இதயத் துடிப்பான டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்பிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது தான் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை. அதாவது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை போலவே டெஸ்ட் போட்டிகளுக்கும் தனியாக ஒரு உலக கோப்பையை கடந்த 2019 ஆம் ஆண்டு ஐசிசி அறிமுகப்படுத்தியது. 2019 – 2021 வரை நடந்த அந்த உலகக் கோப்பையின் லீக் சுற்றில் பட்டைய கிளப்பிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது.

WTC

இருப்பினும் இங்கிலாந்தின் சவுதம்டன் நகரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான மாபெரும் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த இந்தியா வெறும் கையுடன் நாடு திரும்பி ஏமாற்றம் அடைந்தது. அந்த வகையில் வரலாற்றின் 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே காணப்படுகிறது. தற்போதைய நிலைமையில் இலங்கைக்கு எதிராக இந்தியா 2வது டெஸ்ட் போட்டியில் வரும் மார்ச் 12ஆம் தேதி பெங்களூருவில் பங்கேற்க உள்ளது. அதன்பின் வரும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி அந்த அணிக்கு எதிராக கடந்த வருடம் நடந்து வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் (2 – 1* என இந்தியா முன்னிலை) ரத்து செய்யப்பட்ட 5வது போட்டியில் விளையாட உள்ளது.

- Advertisement -

அதன்பின் வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்குபெறும் இந்தியா அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் வரலாற்று சிறப்புமிக்க 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாட உள்ளது. அந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருடன் இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை 2021 – 23 தொடரின் லீக் சுற்று போட்டிகள் நிறைவுக்கு வருகிறது. இருப்பினும் தற்போது 5ஆவது இடத்தில் தள்ளாடுவதால் இந்த உலக கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவால் தகுதி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

wtc ind

பைனலுக்கு போகாது:
அதற்கு முதலில் லீக் சுற்றுப் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் ஏதேனும் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும். இந்நிலையில் இந்த வருடத்தின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவது கடினம் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 வெற்றிகளை பெற்றே தீர வேண்டும். ஒரு போட்டியை கூட டிரா செய்யக்கூடாது. மேலும் வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நாம் பங்கு பெரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 என வெல்வோம் என்று நம்புகிறேன். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி கடினமான ஒன்றாகும். ஏனெனில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நாம் படுதோல்வி அடைந்தோம்”

chopra

“நடப்பு சாம்பியனாக இருக்கும் நியூசிலாந்துக்கு சொந்த மண்ணில் 2 போட்டிகள் மட்டுமே உள்ளது. மேலும் அவர்கள் வங்கதேசம் மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை டிரா செய்ததால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாது. ஒருவேளை சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர்கள் வென்றாலும் கூட பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக அவர்கள் வெளிநாட்டில் விளையாட வேண்டியுள்ளது. எனவே அவர்களால் கண்டிப்பாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாது” என கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல கடந்த ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. ஒருவேளை அந்தத் தொடரை இந்தியா கைப்பற்றி இருந்தால் தற்போது எந்தவித தடைகளும் இல்லாமல் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கலாம். ஆனால் அந்தத் தொடரில் தோற்ற காரணத்தால் தற்போது ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக நடக்கும் 6 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வென்றே தீரவேண்டும் என்ற இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 2010 ஆம் ஆண்டே ஜடேஜா இப்படித்தான் வருவாருன்னு தோனி என்கிட்ட சொன்னாரு – நினைவை பகிர்ந்த விக்ரம் சந்திரா

அதில் ஒரு போட்டி டிராவில் முடிந்தால் கூட இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாது என ஆகாஷ் சோப்ரா உண்மையை தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் இறுதிப்போட்டிக்கு செல்ல பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் எனக் கூறிய அவர் வரும் காலங்களில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதை பார்க்க முடியும் என கூறினார்.

Advertisement