- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs PAK : தோல்வியை அர்ஷிதீப் மீது போடுவது சரியா – ரோஹித்தின் கேப்டன்ஷிப் சொதப்பல்கள் இதோ

பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2022 ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் கடுமையாகப் போராடிய இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. துபாயில் செப்டம்பர் 4 ஆம் தேதியன்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 181/7 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 4 பவுண்டரி 1 சிக்சருடன் 60 (43) ரன்கள் விளாசி தன்னுடைய விமர்சனங்களை அடித்து நொறுக்கினார். அதை துரத்திய பாகிஸ்தானுக்கு தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 71 (51) ரன்களும் மிடில் ஆர்டரில் முகமது நவாஸ் 42 (20) ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.

இறுதியில் குஷ்தில் ஷா 14* (11) ரன்களும் ஆசிப் அலி 16 (8) ரன்களும் எடுத்து வெற்றிபெற வைத்து லீக் சுற்றில் தங்களுக்கு தோல்வியை பரிசளித்த இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தனர். மறுபுறம் டாஸ் இழந்து முக்கிய நேரங்களில் சொதப்பி தலை குனியும் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இப்போட்டியில் 18வது ஓவரில் 0 ரன்களில் இருந்தபோது ஆசிப் அலி கொடுத்த கேட்ச்சை இளம் வீரர் அர்ஷிதீப் சிங் கோட்டை விட்டது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

- Advertisement -

மொத்த பழியும்:
ஆனால் கடைசி ஓவர் உட்பட மொத்தம் 3.5 ஓவரில் 1 விக்கெட் எடுத்து 27 ரன்கள் மட்டும் கொடுத்து எஞ்சிய அனைத்து தருணங்களிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் அந்த கேட்ச்சை விட்டதால்தான் இந்தியா தோல்வியடைந்ததாக விமர்சிக்கும் நிறைய ரசிகர்கள் தோல்விக்கான மொத்த பழியையும் அவர் மீது போட்டுள்ளார்கள். ஆனால் உண்மையாகவே விராட் கோலி தவிர பெரும்பாலான வீரர்களும் கேப்டன் ரோகித் சர்மாவின் தவறான அணுகுமுறைகளும் தான் தோல்விக்கு காரணமனதை பற்றி பார்ப்போம்:

1. தினேஷ் கார்த்திக்: முதலில் ஜடேஜா காயமடைந்தார் என்பதற்காக தீபக் ஹூடாவை அணியில் சேர்த்த கேப்டன் ரோகித் சர்மா அதற்காக தினேஷ் கார்த்திக்கை அதிரடியாக நீக்கி ஏற்கனவே 56 போட்டிகளில் விளையாடி ஒரு முறை கூட ஆட்டநாயகன் விருது வெல்லும் அளவுக்கு செயல்படாத ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கொடுத்தார்.

- Advertisement -

அதில் ரிஷப் பண்ட் வழக்கம்போல குருட்டுத்தனமாக அடித்து 14 ரன்களில் ஏமாற்றினார். அதேசமயம் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் 5வது ஓவரிலிருந்து போராடிய விராட் கோலி சோர்வடைந்ததால் கடைசி ஓவரில் ஃபினிஷிங் செய்ய முடியவில்லை.

ஆனால் இறுதியாக இந்தியா வெற்றி பெறுவதற்கு 15 – 20 ரன்களே குறைவாக இருந்த நிலையில் 16 – 20 வரையிலான காலகட்டத்தில் விளையாடி அந்த ரன்களை எடுக்கக்கூடிய தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டது தோல்விக்கு முக்கிய பங்காற்றியது என்று வெளிப்படையாக கூறலாம்.

- Advertisement -

2. மோசமான கேப்டன்ஷிப்: அதேபோல் ஜடேஜாவுக்கு பதில் தேர்வு செய்யப்பட்ட தீபக் ஹூடாவுக்கு சஹால், புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா ஆகியோர் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கி தடுமாறியபோது ஒரு ஓவர் கூட பந்து வீசுவதற்கு கேப்டன் ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கவில்லை.

ஆனால் சமீப காலங்களில் சிறப்பாக பந்து வீசி நல்ல பார்மில் இருக்கும் ஹூடாவுக்கு இதுபோன்ற சூழ்நிலையில் பந்து வீச வாய்ப்பு வழங்கவில்லையெனில் எதற்காக தேர்வு செய்யப்பட்டார் என்பது ரோகித் சர்மாவுக்கே வெளிச்சம்.

- Advertisement -

3. தேவையற்ற கோபம்: பொதுவாக எவ்வளவு அழுத்தங்கள் இருந்தாலும் அதை கூலாக சமாளிப்பது கேப்டன்ஷிப் பண்புகளில் முக்கியமான ஒன்றாகும். அந்த பாதையில் நடப்பவராக கருதப்படும் ரோகித் சர்மா நேற்று கடைசி சில ஓவர்களில் சுமாராக செயல்பட்ட இந்திய வீரர்களிடம் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார்.

4. தோல்வியான கட்டுப்பாடு: அதேபோல் எந்த பவுலரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை சரியாக கணித்து நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிப்பதும் கேப்டனுடைய பொறுப்பாகும். அதை நேற்று செய்யத் தவறிய ரோகித் சர்மாவால் விதிமுறைப்படி கடைசி சில ஓவர்களில் உள்வட்டத்துக்கு வெளியே ஒரு பீல்டர் குறைக்கப்பட்டதும் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

5. சுமாரான பேட்டிங்: கேப்டன் முன்னின்று வழி நடத்த வேண்டும் என்று சொல்வார்கள். அதற்கு பேட்டிங்கில் அதிரடியாக 28 ரன்களை 175.00 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட அவர் வழக்கம் போல அதைப் பெரிய ரன்களாக மாற்றாமல் அவுட்டானதும் தோல்விக்கு ஒரு காரணமானது.

இதையும் படிங்க : IND vs PAK : நேற்றைய போட்டி முடிந்ததும் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச்செல்லப்பட்ட நட்சத்திர வீரர் – என்ன ஆனது?

அவர் போக ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதும் 19வது ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்ட போது கொஞ்சமும் அனுபவத்தை காட்டாமல் 19 ரன்களை வாரி வழங்கிய சீனியர் பவுலர் புவனேஸ்வர் குமார் ஆகியோரும் தோல்விக்கு காரணமாவார்கள்.

- Advertisement -
Published by