
தமிழ்நாட்டில் புஜ்ஜி பாபு 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி துவங்கியது. அதில் திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் ஜார்க்கண்ட் மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோதின. அதில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக இசான் கிசான் தலைமை தாங்கினார்.
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேசம் 225 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுபம் குஷ்வக் 84 ரன்கள் எடுத்த நிலையில் ஜார்கண்ட் சார்பில் அதிகபட்சமாக சௌரப் சேகர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கி ஜார்க்கண்ட் சிறப்பாக விளையாடிய 289 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் இசான் கிசான் சதமடித்து 106 ரன்கள் குவித்தார்.
திருநெல்வேலியில் கம்பேக்:
குறிப்பாக ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய அவர் நேரம் செல்ல செல்ல அதிரடியாக பேட்டிங் செய்து 92 ரன்கள் இருந்த போது அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு சதத்தை தொட்டார். அந்த வகையில் 5 பவுண்டரி 10 சிக்சர்களைப் பறக்க விட்ட அவர் தனது அணிக்கு 64 ரன்கள் முன்னிலையும் பெற்றுக் கொடுத்தார். மத்திய பிரதேசம் சார்பில் அதிகபட்சமாக பருஸ் மண்டல் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதைத் தொடர்ந்து 64 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் களமிறங்கிய மத்திய பிரதேசம் முடிந்தளவுக்கு போராடியும் 2வது இன்னிங்சில் 238 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அன்கீட் வர்மா 110 ரன்கள் குவித்தார். அதன் பின் 175 ரன்களை துரத்திய ஜார்க்கண்ட் அணிக்கு சிகர் மோகன் 36, குமார் சுராஜ் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினார்.
இறுதியில் ஜார்க்கண்ட் அணிக்கு வெறும் 2 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருந்த நிலையில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 6வது இடத்தில் களமிறங்கி போராடிக் கொண்டிருந்த இசான் கிசான் 55வது ஓவரில் 6, 0, 6 என 2 சிக்ஸர்களை அடித்து மொத்தம் 41* (58) ரன்கள் விளாசி ஃபினிஷிங் செய்தார். அதனால் ஜார்க்கண்ட் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மறுபுறம் ஆகாஷ் ராஜ்வத் 4 விக்கெட்டுகள் எடுத்தும் மத்திய பிரதேசம் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
முன்னதாக முன்னாள் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் சொல்லியும் இசான் கிசான் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை. அதனால் இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட அவர் சமீபத்திய ஜிம்பாப்வே, இலங்கை தொடரில் கழற்றி விடப்பட்டார். அதனால் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அவர் இத்தொடரின் முதல் போட்டியிலேயே சதமடித்து ஃபினிஷிங் செய்து தனது அணியை கேப்டனாக வெற்றி பெற வைத்துள்ளார்.
இதையும் படிங்க: 16 வருடம்.. மார்க்கெட்டில் வாங்க முடியாது.. விராட் கோலியின் 2 விஷயத்தை மேட்ச் பண்ண ஆளில்லை.. ரோஹித் பாராட்டு
அதனால் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மண்ணில் ஆட்டநாயகன் விருது வென்று இசான் கிசான் கம்பேக் கொடுத்துள்ளார். அந்த வகையில் மீண்டும் இந்திய அணிக்கு விளையாட தயாராக இருக்கிறேன் என்பதை அவர் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கருக்கு காண்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.