
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 24-ஆம் தேதி நடைபெற்ற 37-வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பையை தோற்கடித்த கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 168/6 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு குயின்டன் டி காக் 10 (9) மார்கஸ் ஸ்டோனிஸ் 0 (3) போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ராகுல் நங்கூரமாக நின்று தனி ஒருவனைப் போல ரன்களை குவித்தார்.
கடைசி வரை அவுட்டாகாமல் 12 பவுண்டரி 4 சிக்சர்கள் உட்பட இந்த வருடத்தின் 2-வது சதத்தை விளாசிய அவர் 103* (62) ரன்கள் விளாசி தனது அணியை காப்பாற்றினார். மும்பை சார்பில் அதிகபட்சமாக பொல்லார்ட் மற்றும் மெரிடித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
8-வது தோல்வியுடன் மும்பை:
அதை தொடர்ந்து 169 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 5 பவுண்டரி 1 சிக்சர் உட்பட அதிரடியாக 39 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். ஆனால் தேவால்டு ப்ரேவிஸ் 3 (5) நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் 7 (7) போன்ற வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் 67/4 என தடுமாறிய மும்பைக்கு நடு வரிசையில் பொல்லார்ட் மற்றும் திலக் வர்மா ஆகியோர் 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்காக போராடினார்கள்.
அதில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 38 (27) ரன்கள் எடுத்த திலக் வர்மா முக்கியமான நேரத்தில் ஆட்டமிழக்க கைரன் பொல்லார்ட்டும் கடைசி ஓவரில் 19 (20) ரன்களில் அவுட்டாகி கைவிட்டார். அதனால் 20 ஓவர்களில் 132/8 ரன்களை மட்டுமே எடுத்த மும்பை இந்த வருடம் பங்கேற்ற 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 8-வது தோல்வியை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.
சொதப்பும் இஷான் கிசான்:
மும்பையின் இந்த தொடர் தோல்விகளுக்கு மோசமான பவுலிங் சுமாரான பேட்டிங் போன்ற பல அம்சங்கள் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. அதிலும் 15.25 கோடி என்ற பிரம்மாண்ட தொகையை செலவழித்து அந்த அணி வாங்கிய இளம் வீரர் இஷான் கிசான் தொடர்ச்சியாக சொதப்புவது மிக முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் மட்டும் அதிரடியாக 81* ரன்கள் எடுத்த அவர் அதன்பின் பார்மை இழந்து சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வருகிறார்.
அதிலும் தொடக்க வீரரான அவர் அதிரடியாக விளையாடாமல் அதிக பந்துகளை சந்தித்து குறைவான ரன்களை எடுத்து டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி வருவது மும்பைக்கு ஒவ்வொரு போட்டியிலும் தோல்வியை பரிசளிக்கிறது. பொதுவாக இதுபோன்ற மோசமான நிலைமையில் தவிக்கும் வீரருக்கு சில தருணங்களில் அதிலிருந்து வெளியே வருவதற்கு அதிர்ஷ்டத்தின் உதவி கண்டிப்பாக தேவைப்படும்.
லக் இல்ல:
ஆனால் நேற்றைய போட்டியில் ஒருபுறம் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ரன்களை குவிக்க மறுபுறம் 20 பந்துகளில் வெறும் 8 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்த இஷான் கிசான் 7-வது ஓவரில் வீசிய ரவி பிஸ்னோய் பந்தில் அவுட்டானதை பார்த்தால் அவருக்கு சுத்தமாக அதிர்ஷ்டம் இல்லை என்றே கூறத் தோன்றும்.
ஏனெனில் ரவி பிஸ்நோய் வீசிய அந்த ஓவரின் முதல் பந்து கிட்டத்தட்ட ஒய்ட் போல வந்த நிலையில் அதை தேவையில்லாமல் அடிக்க முயற்சித்த இஷான் கிசான் பேட்டின் விளிம்புப் பகுதியில் பட்ட அந்த பந்து தரையில் படாமல் விக்கெட் கீப்பராக இருந்த குயின்டன் டி காக் காலில் பட்டு பவுன்ஸ் ஆனது.
இதையும் படிங்க : என்ன ஆணவம் ! பிறந்தநாளில் சச்சினை மறைமுகமாக கலாய்த்த இங்கிலாந்து – இந்திய ரசிகர்கள் கோபம்
அதை முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஜேசன் ஹோல்டர் எந்தவித சிரமமும் இல்லாமல் அழகாக பிடித்தார். இப்படிப்பட்ட ஒரு அவுட்டை பார்க்கும் ரசிகர்கள் வியந்து போகிறார்கள். இந்த இடத்தில் ஒய்ட் ஆக வந்த பந்தை அவர் எதற்காக அடிக்க முயன்றார், அதை அடிக்காமல் விட்டிருந்தால் ஒரு எக்ஸ்ட்ரா ரன் மற்றும் எக்ஸ்ட்ரா பந்து கிடைத்திருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால் அதை வேண்டுமென்றே அடித்த அவருக்கு அதற்கு பரிசாக துரதிர்ஷ்டவசமான அவுட் கிடைத்ததுதான் மிச்சமாகும்.