IND vs NZ : இதுக்கு மேலையும் இவர் தேவையா? சொந்த மண்ணிலேயே 2 மோசமான தடவல் சாதனைகளை படைத்த இஷான் கிசான்

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் இல்லாமலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் அசத்தலாக செயல்பட்டு சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதையும் உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணி என்பதையும் நிரூபித்துள்ளது. குறிப்பாக முதலிரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளை பெற்றதால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக பிப்ரவரி 1ஆம் தேதியன்று ஆமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 234/5 ரன்கள் குவித்து மிரட்டியது.

அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய சுப்மன் கில் சதமடித்து 126* (63) ரன்களும் ராகுல் திரிபாதி 44 (22) ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 235 ரன்களை துரத்திய நியூசிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக பந்து வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 12.1 ஓவரில் வெறும் 66 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் 35 (25) ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பாண்டியா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

இனிமேலும் தேவையா:
அதனால் 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாக உலக சாதனை படைத்து கோப்பையை வென்றது. அப்படி அனைத்து துறைகளிலும் அசத்தலாக செயல்பட்டு அபார வெற்றி பெற்ற இந்திய அணியில் தொடக்க வீரர் இசான் கிசான் மட்டும் பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சில் கூட மீண்டும் 1 ரன்னில் அவுட்டானது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. ஏனெனில் 2021இல் இந்தியாவுக்காக அறிமுகமாகி முதல் டி20 போட்டியில் அரை சதமடித்து அசத்திய அவர் 2022 ஐபிஎல் தொடரில் படுமோசமாக செயல்பட்டது மும்பை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்க

இருப்பினும் அதன் பின் இந்தியாவுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓரளவு அசத்திய அவர் கடந்த டிசம்பர் மாதம் வங்கதேசம் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரராக உலக சாதனை படைத்தார். அதனால் அவர் பார்முக்கு திரும்பி விட்டதாகவும் தரமான அதிரடி இடது கை தொடக்க வீரர் கிடைத்து விட்டதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அந்த போட்டிக்கு பின் வாய்ப்பு பெற்ற எந்த போட்டியிலும் அரை சதம் கூட அடிக்காத அவர் டி20 போட்டிகளில் பெரும்பாலும் அதிக பந்துகளை எதிர்கொண்டு சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக சுழலை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடும் அவர் கடந்த 14 போட்டிகளில் 27, 15, 26, 3, 8, 11, 36, 10, 37, 2, 1, 4, 19, 1 என ஒரு அரை சதம் கூட அடிக்காமல் வெறும் 200 ரன்களை 14.28 என்ற மோசமான சராசரியில் 105.26 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். அதை விட 4, 19, 1 என இந்த தொடரின் 3 போட்டிகளிலும் சேர்த்து வெறும் 25 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மிகவும் குறைவான ரன்களை எடுத்த இந்திய தொடக்க வீரர் என்ற தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய பரிதாப சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. இஷான் கிசான் : 25, நியூசிலாந்துக்கு எதிராக
2. இஷான் கிசான் : 40, இலங்கைக்கு எதிராக
3. ரோஹித் சர்மா : 43, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக

மேலும் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 போட்டிகளில் அதிக முறை 5 ரன்களுக்கும் குறைவாக அவுட்டான இந்திய விக்கெட் கீப்பர் என்ற பரிதாப சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. இஷான் கிசான் : 4* (9 இன்னிங்ஸ்)
2. ரிஷப் பண்ட் : 3 (23 இன்னிங்ஸ்)
3. எம்எஸ் தோனி : 2 (31 இன்னிங்ஸ்)

இதையும் படிங்க: இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார்ஸ் இவங்க 2 பேர்தான். அணில் கும்ப்ளே கணிப்பு – அந்த 2 பேர் யார்?

முன்னதாக தடவலாக செயல்பட்ட ராகுலுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற இவர் தற்போது அவரையும் மிஞ்சும் வகையில் மோசமாக செயல்படுவதால் அதிருப்தியடைந்துள்ள ரசிகர்கள் இவர் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று கலாய்ப்பதுடன் இனிமேலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் பிரிதிவி ஷா’க்கு வாய்ப்பு கொடுக்குமாறு கோரிக்கை வைக்கிறார்கள்.

Advertisement