
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அடுத்ததாக எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது துணை கேப்டனாக செயல்பட்டு வந்த சுப்மன் கில் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக அதிரடியாக நீக்கப்பட்டார். அதன் காரணமாக இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக மீண்டும் அக்சர் பட்டேல் பொறுப்பேற்றுள்ளார். இப்படி இந்திய டி20 அணியில் இருந்து சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டது பலரது மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஒருபுறம் சுப்மன் கில்லை நீக்கியது சரியான முடிவு என்றும் அணியின் காம்பினேஷனுக்காக இந்த முடிவை நிர்வாகம் எடுத்தது மிகச் சிறப்பான ஒன்று என்று ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் எதிர்கால நிரந்தர கேப்டனாக பார்க்கப்படும் அவரிடம் இருக்கும் திறமைக்கு நிச்சயம் அவரை இந்த டி20 உலக கோப்பை தொடரில் விளையாட வைத்திருக்கலாம் என்றும் அவரால் மிகச் சிறப்பான கம்பேக் கொடுத்திருக்க முடியும் என்றும் ஒரு சிலர் அவருக்கு ஆதரவுகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சுப்மன் கில்லின் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறுகையில் : இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக மாறிய பிறகு இங்கிலாந்து தொடரில் அற்புதமான ஆட்டத்தை கில் வெளிப்படுத்தினார். கேப்டனாகும் முன்னர் தனது சராசரி மிகவும் குறைவாக இருந்த வேளையில் கேப்டனான பின்னர் அவரது சராசரியை உயர்த்தினார்.
அதுமட்டுமின்றி கேப்டனாகவும் அந்த தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அதன்பிறகு ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியை பெற்றதும் ஒருநாள் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இப்படி கேப்டன் பொறுப்பை ஏற்றதும் தன்னிடம் இருக்கும் பொறுப்பை உணர்ந்து தனது திறனை அவர் வளர்த்தெடுத்தது அற்புதமாக இருந்தது.
ஆனால் டி20 போட்டிகளை பொருத்தவரை அவரது பார்ம் மோசமாக இருப்பது உண்மைதான். இந்த ஆண்டு முழுவதுமே அவர் டி20 போட்டிகளில் தடுமாறி இருக்கிறார். ஆனாலும் இந்த தடுமாற்றத்திலிருந்து மீண்டும் அவர் மிகச் சிறப்பான கம்பேக் கொடுப்பார் என்று நினைக்கிறேன். சுப்மன் கில் போன்ற ஒரு திறமையான வீரரை எப்பொழுதுமே மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதில் தவறு கிடையாது. ஏனெனில் விராட் கோலி வளர்ந்து வந்த நேரத்தில் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டார்.
இதையும் படிங்க : 2 ஆண்டு போராட்டம்.. ஒருவழியாக ஓய்வை அறிவித்த உஸ்மான் கவாஜா – விவரம் இதோ
அதன் பின்னர் விராட் கோலி தற்போது ஒரு லெஜெண்டாக மாறி 25000 முதல் 30000 ரன்களை குவித்துள்ளார். தற்போது விராட் கோலி உச்ச வீரராக பார்க்கப்படும் வேளையில் அவருடன் சுப்மன் கில்லை ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கு சுப்மன் கில்லிடம் சிறப்பான ஆட்டம் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடையேயான ஒப்பீடும் பெரியளவில் இருக்கும் என சுப்மன் கில்லை இர்பான் பதான் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.