
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதும் ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டதும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா அணியின் கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் 2024 சயீத் முஷ்டாக் அலி கோப்பையையும் மும்பை அணிக்காக வென்றார்.
2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் அடித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவிய அவர் 2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார். அதனால் 11 வருடங்கள் கழித்து பஞ்சாப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற அவர் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வுக்குழுவினர் அவரை ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட எடுக்கவில்லை.
மறுபுறம் சுப்மன் கில் சமீபத்திய இங்கிலாந்து தொடரில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டு 754 ரன்கள் குவித்து இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் அவர் தொடர்ச்சியாக 150 – 170 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் அடிக்க தடுமாறினார். அப்படிப்பட்ட அவரை வருங்கால கேப்டனாக வளர்ப்பதற்காக பிசிசிஐ ஸ்ரேயாஸ், ஜெய்ஸ்வால் ஆகியோரை கழற்றி விட்டு வாய்ப்பு கொடுத்துள்ளது.
அதன் காரணமாக இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்ஷிப் பொறுப்பை பெறும் வாய்ப்பை இழந்துள்ளார் என்றே சொல்லலாம். ஏனெனில் சுப்மன் கில் வந்துள்ளதால் அவருக்கு பெஞ்சில் அமரும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் டி20 கேப்டனாக வருவதற்கு தகுதியுடையவர் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.
எனவே பொறுமையாக காத்திருக்கும் பட்சத்தில் அவருக்கு டி20 அணியில் இடமும் கேப்டன்ஷிப் பதவியும் கிடைக்கும் என்று பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் பதான் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஸ்ரேயாஸ் ஐயர் டி20 அணியில் இருப்பதற்கு மட்டும் தகுதியானவர் கிடையாது. தலைமைப் பொறுப்பிலும் அங்கமாக இருக்க வேண்டியவர் என்பது பற்றி என்னுடைய மனதில் எந்த சந்தேகமும் இல்லை”
இதையும் படிங்க: சுப்மன் கில்லுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில் தப்பே இல்ல.. ஆதரவு தெரிவித்து பதிவை வெளியிட்ட – பிரியங்க் பஞ்சால்
“அதை பெறுவதற்கு தற்சமயத்தில் அவர் பொறுமை இருப்பதே சாவியாகும்” என்று கூறினார். அவர் கூறுவது போல வருங்காலங்களில் ஸ்ரேயாஸ் ஐயர் ஓரிரு ஐபிஎல் கோப்பைகளை வென்றால் மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. துரதிஷ்டவசமாக சுப்மன் கில் காயமடைந்தாலோ அல்லது ஃபார்மை இழந்தாலோ ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.