
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்கும் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 8-ஆம் தேதி கோலாகலமாக துவங்க இருக்கிறது. செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த தொடருக்கான சூரியகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய அணியானது தங்களது முதலாவது போட்டியில் செப்டம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து துபாய் மைதானத்தில் விளையாடவுள்ளது.
இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று துபாய் சென்று அங்குள்ள ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனாக இந்த ஆசிய கோப்பை தொடரில் களமிறங்கும் இந்திய அணியானது அந்த பட்டத்தை தக்க வைக்கும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் சிறப்பாக செயல்படுவார்கள்? என்பது குறித்த சில கருத்துக்களை முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : பும்ராவை தவித்து பார்த்தால் இந்திய அணியில் மற்றொரு எக்ஸ் பேக்டர் வீரரை தேர்வு செய்வது கடினம்.
ஏனெனில் ஆல் ரவுண்டர்களாக தற்போதைய இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் நல்ல பங்களிப்பை வழங்குகின்றனர். ஆனாலும் என்னை பொறுத்தவரை தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி எவ்வாறு செயல்படப்போகிறார்? என்பதை நான் காண ஆவலாக உள்ளேன்.
இதையும் படிங்க : அஸ்வினுக்கு ஆஸ்திரேலியாவில் வரவேற்பு.. விராட், ரோஹித்துக்கும் உருவாகும் வாய்ப்பு.. ஆஸி நிர்வாகி பேட்டி
ஏனெனில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டி20 உலக கோப்பை தொடரின் போது மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் தற்போது மீண்டும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். எனவே இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு அவர் முக்கிய பங்காற்றுவார் என்று தான் நினைப்பதாக இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.