
இந்திய அணியின் நட்சத்திர இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 63 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் அவர் 1 விக்கெட்டை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய பவுலராகவும் சாதனையை நிகழ்த்துவார்.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருந்து வரும் அர்ஷ்தீப் சிங் டி20 போட்டிகளை பொருத்தவரை நம்பர் 1 பௌலராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் போதும் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக 17 விக்கெட்களுடன் முதலிடத்தை அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.
இப்படி மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அர்ஷ்தீப் சிங்கக்கு பலரது மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவ்வேளையில் அர்ஷ்தீப் சிங்கிற்கு அடுத்து சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்றால் அது கலீல் அகமது தான் என்றும் அவரால் மிகச் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : கலீல் அகமது 135 முதல் 140 கிலோ மீட்டர் வரை வேகத்தில் பந்து வீசுவார். அதோடு பந்தினை அவரால் இருபுறமும் ஸ்விங் செய்ய முடியும். அதுமட்டும் இன்றி பவுன்சர் பால், யார்க்கர் பால், ஸ்லோவர் பால் என அனைத்து வகையான பந்துகளையும் அவரால் வீச முடியும்.
இப்படி அனைத்து விதமான திறமையினையும் கொண்ட அவரே அர்ஷ்தீப் சிங்குக்கு அடுத்து சிறந்த இடதுகை பந்துவீச்சாளர் என தான் கருதுவதாக இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக பந்துவீசி மீண்டும் அனைவரது பார்வையையும் கலீல் அகமது தன் பக்கம் திரும்பியுள்ளார்.
இதையும் படிங்க : 21 சிக்ஸர்கள்.. 272 ரன்கள்.. உச்சகட்ட பார்மில் பொளக்கும் சஞ்சு சாம்சன் – சூடுபிடிக்கும் துவக்க வீரருக்கான இடம்
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான கலீல் அகமது இதுவரை 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 18 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து 71 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.