ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அண்மையில் பி.சி.சி.ஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைத்தது மட்டுமின்றி துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளதால் அவர் ஆசிய கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று தெரிகிறது. எனவே சஞ்சு சாம்சனின் துவக்க வீரருக்கான இடம் பறிபோகும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
கேரளா லீக்கில் பொளந்து கட்டும் சஞ்சு சாம்சன் :
ஏனெனில் ஏற்கனவே இந்திய டி20 அணியில் துவக்க வீரராக சுப்மன் கில் விளையாடி வந்த வேளையில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அதன்பிறகு தான் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் கடந்த பல தொடர்களாகவே தொடர்ந்து துவக்க வீரர்களாக விளையாடி வந்தனர். இந்நிலையில் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் சுப்மன் கில் டி20 அணிக்கு திரும்பியுள்ளதால் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து அவரே துவக்க வீரராக களமிறங்குவார் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்புகளை வழங்கி வருகின்றனர்.
அதனால் சஞ்சு சாம்சன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனக்கு கிடைத்து வரும் தொடர் வாய்ப்பை இழக்கும் தருவாயில் உள்ளார். இது அவரது கரியருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். அதேபோன்று ஒருவேளை சஞ்சு சாம்சன் துவக்க வீரராக இடம்பெறவில்லை எனில் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்காகவும் சில முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனாலும் மிடில் ஆர்டரில் அவரால் சோபிக்க முடியுமா என்பது உறுதி கிடையாது.
ஆசிய கோப்பை தொடரில் சுப்மன் கில் துவக்க வீரராக விளையாடினால் ஜிதேஷ் சர்மாவே பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்புள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக தற்போது கேரளாவில் நடைபெற்று வரும் கேரளா லீக் தொடரில் விளையாடிய வரும் சஞ்சு சாம்சன் கடந்த மூன்று போட்டியில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதம் என 272 ரன்களை அடித்து நொறுக்கி உள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த மூன்று போட்டியில் மட்டும் 21 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். இதன் காரணமாக எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவரே துவக்க வீரராக விளையாட வேண்டும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது இந்த அதிரடியான ஆட்டத்தினால் தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான துவக்க வீரருக்கான போட்டி சூடு பிடித்துள்ளது.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியில் இருந்த அப்போ எனக்கு உதவியது அவர் மட்டும் தான்.. தோனி இல்ல – நாராயணன் ஜெகதீசன் பேட்டி
இருப்பினும் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதனால் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான ஓப்பனர் குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



