ஆஸ்திரேலிய தொடரில் ராகுல் – கில் ஆகியோரில் சிறந்த தொடக்க வீரர் யார்? இர்பான் பதான் ரசிகர்கள் எதிர்பாராத கருத்து

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களை வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் களமிறங்குகிறது. வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் நாக்பூரில் துவங்கும் இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு கேஎல் ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக ரோகித் சர்மாவுடன் அவரே தொடக்க வீரராகவும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

KL Rahul

- Advertisement -

ஆனால் 2022 ஐபிஎல் தொடருக்குப்பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த பின் ஃபார்மை இழந்து தடுமாறும் அவர் அதிரடியாக விளையாட வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்டது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனாலேயே சமீபத்திய இலங்கை ஒருநாள் தொடரில் ஓப்பனிங் இடத்தையும் துணை கேப்டன் பதவியையும் இழந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆஸ்திரேலிய தொடரில் கடைசி முறையாக அந்த வாய்ப்பை பெற்றுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

உடனே கொடுக்க முடியாது:
இருப்பினும் கடைசியாக வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் காயமடைந்த ரோகித் சர்மாவுக்கு பதில் கேப்டனாக செயல்பட்ட அவர் பேட்டிங்கில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராகவே செயல்பட்டார். அதனால் ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் ரசிகர்கள் அதே வங்கதேச தொடரில் முதல் முறையாக சதமடித்து சமீபத்திய இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இரட்டை சதத்தையும் சதத்தையும் விளாசி உச்சகட்ட பார்மில் இருக்கும் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கோரிக்கை வைக்கிறார்கள்.

Shubman Gill

நியாயமும் அது தான் என்றாலும் துணை கேப்டனாக இருப்பதால் ராகுல் தான் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சுப்மன் கில் சிறப்பாக செயல்படுகிறார் என்பதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2021 செப்டம்பர், 2022 ஜனவரி ஆகிய காலகட்டத்தில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற சவாலான வெளிநாடுகளில் சதமடித்த ராகுலை மறந்து விடக்கூடாது என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சுப்மன் கில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட நிலையான இடத்தை பிடித்துள்ளார் என்பதற்காக உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் வாய்ப்பு கொடுத்து விட முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “3 வகையான கிரிக்கெட்டிலும் இன்னும் அவர் ஜொலிக்கவில்லை. 2 வகையான கிரிக்கெட்டை சொல்லலாம். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளை பொறுத்த வரை உங்களிடம் 2 விதமான தொடக்க வீரர்கள் உள்ளனர். அதில் ஒருவர் இங்கிலாந்து போன்ற கடினமான சூழ்நிலைகளில் ரன்களை அடித்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்”

Irfan-pathan

“எனவே டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் ரன்களை அடித்துள்ளார் என்பதற்காக திடீரென்று ராகுலை வெளியே அனுப்பி விட்டு அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது. அதனால் ராகுல் – ரோஹித் ஆகியோர் தான் இந்த தொடரில் சிறந்த தொடக்க வீரர்களாக செயல்பட தகுதியானவர்கள். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் தனக்கான இடத்தை உறுதி செய்து விட்டார் என்று கருதுகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டிலும் அதை அவர் செய்துள்ளார். இதை அவர் தொடரும் பட்சத்தில் நிச்சயமாக 2023 உலகக்கோப்பையில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்குவார் என்பதில் சந்தேகமில்லை”

இதையும் படிங்க: பணத்துக்காக ஓடாதீங்க, காயத்தை தவிர்த்து பும்ரா வெற்றிகரமாக செயல்பட – ஜாம்பவான் ஜெப் தாம்சன் அட்வைஸ்

“குறிப்பாக ஆரம்ப கட்டத்தில் தடுமாறிய டி20 கிரிக்கெட்டில் தற்போது அசத்த துவங்கியுள்ள தன்னம்பிக்கை அவருடைய இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது என்றே கூறலாம். அத்துடன் டி20 உலக கோப்பைக்கு பின் புதிய அணியை உருவாக்கும் வேலையும் நடைபெறுவதால் அவர் வெள்ளை பந்து அணியின் தொடக்க வீரராக இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்” என்று கூறினார்.

Advertisement