பணத்துக்காக ஓடாதீங்க, காயத்தை தவிர்த்து பும்ரா வெற்றிகரமாக செயல்பட – ஜாம்பவான் ஜெப் தாம்சன் அட்வைஸ்

- Advertisement -

2023 காலண்டர் வருடத்தில் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் இந்தியா செயல்பட்டு வருகிறது. அதற்காக தயாராகும் பயணத்தில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா இதுவரை இந்திய அணியுடன் இணைந்து விளையாடாமல் இருப்பது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து முக்கிய நேரங்களில் விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக உருவெடுத்துள்ள அவர் கடந்த 2022 ஜூலை மாதம் நடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயமடைந்தார்.

அதனால் ஆசிய கோப்பையில் பங்கேற்காத அவர் காயத்திலிருந்து குணமடைந்து ஓரிரு போட்டியளில் விளையாடிய பின் மீண்டும் காயமடைந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை வெளியேறினார். அவர் இல்லாமல் அந்த 2 தொடர்களிலும் இந்தியா தோற்ற நிலையில் காயத்திலிருந்து குணமடைவதற்காக வழக்கம் போல பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு பும்ரா சென்றார். அங்கு 3 மாதங்களாக முகமிட்டிருந்த அவர் காயத்திலிருந்து குணமடைந்து விட்டதால் கடந்த ஜனவரியில் நடைபெற்ற இலங்கை எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்தது.

- Advertisement -

ஜெப் தாம்சன் அட்வைஸ்:
ஆனால் அவசரமாக களமிறங்கி மீண்டும் காயமடைந்து விடக்கூடாது என்பதற்காக அத்தொடரிலிருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்ட பும்ரா அடுத்ததாக இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரிலும் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. ஆனால் அதிலிருந்து அவர் மீண்டும் குணமடைந்து வரும் போது மார்ச் மாதம் 2023 ஐபிஎல் துவங்கும் என்பதால் பேசாமல் அதிலேயே களமிறங்குமாறு அவரை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். ஏனெனில் 2019 முதல் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 99% போட்டிகளில் விளையாடிய அவர் அதே காலகட்டத்தில் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் வெறும் 30% போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

அதனால் பும்ரா பணத்துக்காக ஐபிஎல் தொடரில் தான் விளையாடுவார் நாட்டுக்காக காயமடைந்து வெளியேறுவார் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பவுலிங் ஆக்சனை வைத்துக்கொண்டு நீண்ட காலம் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட முடியாது என்பதால் பணத்துக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடலாமா அல்லது தரத்துக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடலாமா என்பதை பும்ரா தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஜெப் தாம்சன் அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -

தங்களது காலத்தில் பணம் இல்லாமல் தரம் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்தில் பேசியது பின்வருமாறு. “வெள்ளப்பந்து அல்லது டெஸ்ட் அல்லது இரண்டிலும் விளையாடலாமா என்பது பற்றி பும்ரா தான் முடிவெடுக்க வேண்டும். இருப்பினும் ஒருவேளை நான் இந்த சமயத்தில் விளையாடியிருந்தால் கூட டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினமாக இருந்திருக்கும். ஏனெனில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் உங்களுக்கு அதிகப்படியான பணம் கிடைக்கிறது. அதில் விளையாடி உங்களது கேரியரையும் நீங்கள் நீட்டிக்க முடியும். ஆனால் எங்களது காலத்தில் நாங்கள் பணத்தைப் பற்றி நினைக்காமல் விளையாடினோம். ஏனெனில் அந்த சமயத்தில் விளையாட்டில் பணம் இல்லை”

“ஆனால் அது தற்போது மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. அங்கே அனைவரும் தங்களைப் பற்றி தான் யோசிப்பார்கள். எனவே நீங்கள் நம்மால் எவ்வளவு காலம் விளையாட முடியும் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து முடிவெடுக்க வேண்டும். இந்த காலத்தில் பணிச்சுமையின் அடிப்படையில் நீங்கள் இன்னும் தந்திரமாக இருந்து விளையாட வேண்டுமென நினைக்கிறேன். நீங்கள் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் அவர்கள் நிச்சயம் உங்களை எந்த வழியிலும் தேர்வு செய்வார்கள்”

இதையும் படிங்க: நாங்க திருந்திட்டோம் ஆனா டெஸ்ட் கிரிக்கெட்டின் அழிவுக்கு இந்தியா தான் காரணம் – இயன் போத்தம் அதிரடி விமர்சனம்

“மேலும் பும்ரா எந்தளவுக்கு தரமானவர் என்பதை ரசிகர்கள் அறிவார்கள். ஒருவேளை அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணித்தால் அது இந்திய அணிக்கு பின்னடைவாகும். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் அவர் விளையாடினால் அவரை பார்க்க ரசிகர்கள் வருவார்கள். மொத்தத்தில் அவர் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் விளையாடலாம் என்று தனக்கு தானே வரையறுத்துக் கொண்டால் மட்டுமே நீண்ட காலம் விளையாட முடியும்” என்று கூறினார்.

Advertisement