நாங்க திருந்திட்டோம் ஆனா டெஸ்ட் கிரிக்கெட்டின் அழிவுக்கு இந்தியா தான் காரணம் – இயன் போத்தம் அதிரடி விமர்சனம்

- Advertisement -

இந்தியாவுக்காக தரமான அடுத்த தலைமுறை இளம் வீரர்களை கண்டறியும் வகையில் கடந்த 2008ஆம் ஆண்டு 8 அணிகளுடன் சாதாரண டி20 கிரிக்கெட் தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் பல்வேறு பரிணாமங்களை கடந்து இன்று தரத்தில் உலகக் கோப்பையை மிஞ்சி சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் உலகின் நம்பர் ஒன் தொடராக உருவெடுத்துள்ளது. அதில் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானமாக கிடைப்பதால் ஐசிசி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளை மிஞ்சிய பிசிசிஐ உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக ஜொலிக்கிறது. அதே போல் அதில் விளையாடும் வீரர்களும் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பளமாக பெறுகிறார்கள்.

IPL 2022

- Advertisement -

மேலும் ஒரு காலத்தில் 50 ஓவர்களில் 250 ரன்களை கூட அடிக்க முடியாமல் திணறிய சர்வதேச கிரிக்கெட்டில் இன்று 20 ஓவர்களில் 250 ரன்கள் அடிக்கும் நிலைமை வந்ததற்கு ஐபிஎல் தொடர் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அத்துடன் ஐபிஎல் தொடரால் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் பல வெளிநாடுகளுக்கும் நிறைய தரமான இளம் வீரர்கள் கிடைத்து வருகிறார்கள். இப்படி நிறைய நன்மைகள் இருந்தாலும் அதற்கு சமமான பாதகங்களையும் ஐபிஎல் கொண்டுள்ளது.

ஐபிஎல் காரணம்:
முதலில் வருடம் முழுவதும் விளையாடினால் கூட கிடைக்காத கோடிக்கணக்கான சம்பளம் 2 மாதம் விளையாடுவதற்கு கொடுக்கப்படுவதால் இப்போதெல்லாம் நிறைய வீரர்கள் நாட்டை விட ஐபிஎல் தொடருக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். மற்றொன்று ஏற்கனவே 74 போட்டிகளாக விரிவு படுத்தப்பட்டுள்ள ஐபிஎல் வரும் காலங்களில் 84, 94 போட்டிகள் கொண்ட தொடராக மேலும் விரிவடைய உள்ளது. இதனால் சர்வதேச போட்டிகள் குறிப்பாக கிரிக்கெட்டின் இதயமாகவும் உயிர் நாடியாகவும் கருதப்படும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை குறைய துவங்கியுள்ளது.

Jasprit Bumrah Team India

இந்நிலையில் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் அழிவதற்கு ஐபிஎல் தான் முக்கிய காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து ஜாம்பவான் வீரர் இயன் போத்தம் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால் தங்களது நாட்டில் இப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து விளையாடுவதாலேயே தற்போது தங்களது அணி மிகச் சிறப்பாக செயல்பட துவங்கியுள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தற்போது நீங்கள் இந்தியாவுக்கு சென்று பாருங்கள் அங்கு யாரும் டெஸ்ட் போட்டிகளை பார்க்க மாட்டார்கள். அங்கே அனைத்தும் ஐபிஎல் என்றாகி விட்டது. அதனால் அவர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கிறார்கள் என்பது சிறப்பாக உள்ளது. ஆனால் அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்? டெஸ்ட் கிரிக்கெட் 100 வருடங்களுக்கு மேலாக விளையாடப்படுவதால் அது எங்கேயும் செல்லாது”

botham

“மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை நீங்கள் இழந்தால் நாம் ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் இழப்பதற்கு சமமாகும். ஏனெனில் அது கிரிக்கெட்டின் உயிர்நாடி என்பதை நீங்கள் அறிவீர்கள். அவ்வாறு நடந்தால் அதில் எந்த அர்த்தமும் இல்லை. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி தங்களின் தரத்தை நிரூபிக்கவே ஒவ்வொரு வீரரும் விரும்புவார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல சர்வதேச கிரிக்கெட்டில் தற்சமயத்தில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணியாக இங்கிலாந்து இருக்கிறது. 2வது இடத்தில் ஆஸ்திரேலியா இருக்கும் நிலையில் 3வது இடத்தில் தான் இந்தியா உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்காததும் ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் இதிலிருந்து தெளிவாக புரிந்து கொள்ளலாம். மேலும் பாண்டியா உள்ளிட்ட நிறைய வீரர்கள் பணத்துக்காக டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணித்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாட முடிவெடுத்து விட்டார்கள்.

இதையும் படிங்க: நான் உங்க அப்பா, தோனி வந்ததால் தப்பிச்சுட்டீங்க – 2015இல் விராட் கோலியை ஸ்லெட்ஜ் செய்தது பற்றி சோஹைல் கான் ஓப்பன்டாக்

மறுபுறம் பணமும் வேண்டும் தரமும் வேண்டும் என்ற கோணத்தில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து கேப்டனாக செயல்படுவதுடன் டி20 கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார். அந்த வகையில் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் மங்குவதற்கு ஐபிஎல் தொடர் முக்கிய காரணமாக அமைவதாக இயன் போத்தம் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement