
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தை நடத்துவதற்கான விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன் தக்க வைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், ஆர்டிஎம் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்திருந்தன.
அதே போல இம்பேக்ட் வீரர் விதிமுறையை நீக்க வேண்டும் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற நிறைய பேர் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் அவற்றை பரிசீலனை செய்த பிசிசிஐ ஐபிஎல் 2025 – 2027 வீரர்கள் ஏல விதிமுறைகளை அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு.
1. ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தாங்கள் விரும்பும் 6 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். அந்த 6 வீரர்கள் தக்க வைத்தல் அல்லது ஆர்டிஎம் பயன்படுத்துவதன் வழியாக இருக்கலாம்.
2. தக்கவைப்பு மற்றும் ஆர்டிஎம் முறையில் வீரர்களின் கலவையைத் தேர்ந்தெடுப்பது ஐபிஎல் அணி நிர்வாகங்களின் விருப்பப்படி இருக்கலாம். அந்த 6 வீரர்கள் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்களாக அல்லது அதிகபட்சமாக 2 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்களாக கொண்டிருக்கலாம்.
3. ஐபிஎல் 2025 தொடரில் அணி உரிமையாளர்களுக்கான ஏலத் தொகை 120 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது மொத்த சம்பளத்தொகை என்பது ஏலத் தொகை, அதிகரிக்கப்பட்ட செயல்பாடுகள் தொகை மற்றும் போட்டி ஊக்கத் தொகையை சேர்த்ததாகும். இதே தொகை கடந்த வருடம் 110 கோடியாக இருந்தது. அது தற்போது 146 கோடியாக உயரும் (ஊக்கத்தொகை சேர்த்து). அதுவே 2026இல் 151, 2027இல் 157 கோடியாக உயர்த்தப்படும்.
4. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக போட்டி ஊக்கத் தொகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி இம்பேக்ட் பிளேயர் உட்பட ஒவ்வொரு போட்டியில் விளையாடும் வீரர்களும் 7.5 லட்சம் ஊக்கத்தொகை பெறுவார்கள். இது அவர்களின் ஒப்பந்த தொகைக்கு கூடுதலாக இருக்கும்.
5. எந்த ஒரு வெளிநாட்டு வீரர்களும் மெகா ஏலத்தில் பெயரை பதிவு செய்ய வேண்டும். தவறினால் அடுத்த வருடம் நடைபெறும் மினி ஏலத்தில் அவர்கள் பங்கேற்க தகுதியற்றவராக இருப்பார்கள்.
6. வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்து, ஏலத்தில் பங்கேற்று ஒரு அணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் வீரர் சீசன் துவங்குவதற்கு முன் வெளியேறினால் 2 வருடம் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும்.
இதையும் படிங்க: கபில் தேவ், அஷ்வினுக்கு அடுத்து 3 ஆவது இந்திய வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்தவுள்ள – ரவீந்திர ஜடேஜா
7. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய இந்திய வீரர் கடந்த 5 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய எந்த வகையான அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறாமல் அல்லது பிசிசிஐ மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இல்லாமல் இருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரராக கருதப்படுவார். இது இந்திய வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
8. இம்பேக்ட் வீரர் விதிமுறை 2025 – 2027 வரை தொடரும்.