ஐபிஎல் 2024 : முதல் முறையாக வெளிநாட்டில் நடக்கும் வீரர்கள் ஏலம்.. தேதி – இடம் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு

IPL 2022
Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 2023 சீசன் கோடைகாலத்தில் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றது. அதில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மழையால் 3 நாட்கள் நடைபெற்ற ஃபைனலில் குஜராத்தை தோற்கடித்து 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற பரம எதிரி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் டைம் சாதனையை சமன் செய்து அசத்தியது.

குறிப்பாக ஃபைனலில் ரவீந்திர ஜடேஜா செய்த ஃபினிஷிங் ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்து படைத்தது. இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரின் 2024 சீசனை கோலாகலமாக நடத்துவதற்கான வேலைகளை பிசிசிஐ துவங்கியுள்ளது. அதன் முதல் பகுதியாக வீரர்கள் ஏலம் நடைபெறும் இடம் மற்றும் தேதிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

வெளிநாட்டில் ஏலம்:
அதன் படி ஐபிஎல் 2024 தொடரின் வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. சொல்லப்போனால் 2008 முதல் இதுவரை நடைபெற்ற அனைத்து வீரர்கள் ஏலங்களும் கொல்கத்தா, பெங்களூரு, சென்னை இந்தியாவின் முக்கியமான நகரங்களில் மட்டுமே நடைபெற்று வந்தது.

ஆனால் தற்போது வரலாற்றிலேயே முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தை வெளிநாட்டு மண்ணில் நடத்துவதற்கு பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் தாங்கள் விரும்பும் வீரர்களை தக்க வைத்து தேவையற்ற வீரர்களை விடுவிப்பதற்கான காலக்கெடுவை நவம்பர் 15ஆம் தேதியிலிருந்து நவம்பர் 26ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் க்ரிக்பஸ் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 100 கோடி ரூபாய்களை பயன்படுத்தி வீரர்களை வாங்குவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அதை விட 2025 ஐபிஎல் தொடருக்காக அடுத்த வருடம் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மீண்டும் மெகா ஏலம் நடத்தப்பட உள்ளது. அதனால் 2024 ஏலத்துடன் இதற்கு முன் போடப்பட்ட நட்சத்திர வீரர்களுக்கான 3 வருட ஒப்பந்தமும் நிறைவுக்கு வரவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தானை நொறுக்கிய நியூஸிலாந்து.. சச்சினையே முந்திய ரச்சின்.. 23 வயதில் புதிய 2 உலக சாதனை

இதை தொடர்ந்து அனைத்து அணிகளும் தாங்கள் விரும்பும் வீரர்களை தக்க வைத்து தேவையற்ற வீரர்களை விடுவிக்கும் வேலைகளை தொடங்கியுள்ளது. அதில் முதலாவதாக மும்பை இந்தியன்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோமாரியா செபார்டை லக்னோ அணிக்கு டிரேடிங் முறையில் கொடுத்துள்ளது. இதே போல வரும் வாரங்களில் சென்னை உட்பட இதர அணிகளும் தங்களுடைய தேவையற்ற வீரர்களை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement