இந்தியாவில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 4ஆம் தேதி காலை 10 மணிக்கு பெங்களூருவில் நடைபெற்ற 35வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் செமி ஃபைனல் செல்வதற்கு இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு 68 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த போதிலும் தடுமாற்றமாக விளையாடிய டேவோன் கான்வே 35 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரச்சின் ரவீந்திரர் அடுத்ததாக வந்த கேப்டன் கேன் வில்லியம்ஸ்னுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார்.
சச்சினையே முந்திய ரச்சின்:
நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 2வது விக்கெட்டுக்கு 180 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்து 11 பவுண்டரி 1 சிக்ஸருடன் 108 (94) ரன்கள் விளாசி அவுட்டானார். முன்னதாக இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக விளையாடும் அவர் ஏற்கனவே 2 சதங்கள் அடித்திருந்த அவர் இதையும் சேர்த்து மொத்தம் 3 சதங்களை பதிவு செய்துள்ளார்.
இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் தங்களுடைய அறிமுக தொடரிலேயே 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார். கடந்த 1975 முதல் நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் வேறு எந்த வீரரும் தங்களுடைய அறிமுக தொடரிலேயே இப்படி 3 சதங்கள் அடித்ததில்லை. இதுபோக ஒரு உலக கோப்பையில் 3 சதங்கள் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற மற்றுமொரு சரித்திரத்தையும் அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன் கிளன் டர்னர் (1975) மார்ட்டின் கப்டில் (2015) கேன் வில்லியம்சன் (2019) ஆகியோர் தலா 2 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது மட்டுமல்லாமல் உலகக்கோப்பை வரலாற்றில் 24 வயதுக்குள் அதிக சதங்கள் (3) அடித்த வீரர் என்ற இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் 24 வயதுக்குள் 2 சதங்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.
இதையும் படிங்க: பாகிஸ்தானை அவமானப்படுத்தாதீங்க.. இந்தியாவை விமர்சித்த முன்னாள் வீரரை வெளுத்த வாசிம் அக்ரம்
அதை தொடர்ந்து மறுபுறம் அசத்திய் கேப்டன் வில்லியம்சன் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் 95 (79) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அவரைத் தொடர்ந்து டார்ல் மிட்சேல் 29, மார்க் சேர்மன் 39, கிளன் பிலிப்ஸ் 41, மிட்சேல் சாட்னர் 26* ரன்கள் எடுத்ததால் 50 ஓவர்களில் நியூசிலாந்து 401/6 ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் உலக கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. மறுபுறம் சுமாராக செயல்பட்ட பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது வாசிம் 3 விக்கெட்களை எடுத்தார்.