ஐபிஎல் 2024 : தோனியின் சென்னை அணிக்கு – தவானின் பஞ்சாப் சவால் விடுமா?புள்ளிவிவரம்.. விரிவான அலசல்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணிக்கு சவாலை கொடுத்து தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை பஞ்சாப் கிங்ஸ் அணி முத்தமிடுமா என்ற அலசலைப் பற்றி பார்ப்போம்.

முதலில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் தரமான வீரர் என்றாலும் சமீப காலங்களில் அதிரடியாக ரன் குவிக்க தடுமாறுவதாலேயே இந்திய அணியில் கழற்றி விடப்பட்டார். எனவே வெற்றி பெறுவதற்கு இம்முறை அவர் அதிரடியாக பெரிய ரன்கள் குவிப்பது அவசியமாகிறது. அதே போல அவருடன் துவக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் பிரப்சிம்ரன் சிங் தொடர்ந்து பெரிய ரன்கள் அடிப்பதற்கு தடுமாறுகிறார்.

- Advertisement -

சென்னை – பஞ்சாப்:
அத்துடன் சமீபத்திய இந்திய டெஸ்ட் தொடரில் தடுமாறிய ஜானி பேர்ஸ்டோவும் இப்போது நல்ல ஃபார்மில் இல்லை என்பது பஞ்சாப்புக்கு பின்னடைவாகும். இருப்பினும் மிடில் ஆர்டரில் தென்னாப்பிரிக்காவின் ரிலீ ரோசவ் அதிரடியாக ரன்கள் குவிக்கும் திறமை கொண்டுள்ளதை கடந்த வருடம் பார்த்தோம். இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் இந்தியாவின் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடி ஃபினிஷர்களாகவும் செயல்படும் திறமையை கொண்டுள்ளனர்.

அதே போல ஜிம்பாப்பே வீரர் சிக்கந்தர் ராசா கடந்த வருடத்தை போல ஆல் ரவுண்டராக அசத்த காத்திருக்கிறார். ஆனால் பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட ஷாம் கரன் சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் தடுமாறி வருவது பஞ்சாப்புக்கு பின்னடைவாகும். மற்றபடி ராகுல் சஹர், லியம் லிவிங்ஸ்டன், சிக்கந்தர் ராசா ஆகியோர் அடங்கிய சுழல் பந்து வீச்சு கூட்டணி வலுவாகவே இருக்கிறது.

- Advertisement -

வேகப்பந்து வீச்சுத் துறையில் இளம் வீரர் அர்ஷிதீப் சிங், அனுபவ வீரர்கள் ஹர்ஷல் படேல் மற்றும் ரிஷி தவானுடன் தென்னாப்பிரிக்காவின் காகிஸோ ரபாடா, இங்கிலாந்தின் கிறிஸ் ஓக்ஸ் ஆகியோர் தரமானவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் பஞ்சாப் அணியில் தரமான வெளிநாட்டு நட்சத்திர வீரர்களுக்கு சமமாக இந்திய வீரர்கள் இல்லை. அதனால் பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ், லிவிங்ஸ்டன், ராசா, ரபாடா, சாம் கரண், கிறிஸ் ஓக்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்களில் 4 பேரை மட்டும் சரியாக தேர்ந்தெடுத்து சமநிலையை உருவாக்குவது பஞ்சாப்புக்கு உள்ள சவாலாகும்.

மறுபுறம் சென்னை அணியில் டேவோன் கான்வே காயத்தால் விலகினாலும் ருதுராஜுடன் ஓப்பனிங்கில் ரச்சின் ரவீந்திரா களமிறங்கி நிலைமையை சமாளிப்பார் என்று நம்பப்படுகிறது. அதைத்தொடர்ந்து பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட டார்ல் மிட்சேல், மொய்ன் அலி மற்றும் அஜிங்க்ய ரகானே ஆகிய உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் மிடில் ஆர்டரில் அசத்துவதற்கு தயாராக உள்ளனர்.

- Advertisement -

அவர்களைத் தொடர்ந்து தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் சிவம் துவேவுடன் ரவீந்திர ஜடேஜா மற்றும் மகத்தான கேப்டன் எம்எஸ் தோனி ஆகியோர் லோயர் மிடில் ஆர்டரில் வலு சேர்த்து ஃபினிஷர்களாக செயல்பட காத்திருக்கின்றனர். அதே போல சுழல் பந்து வீச்சு துறைக்கு மஹீஸ் தீக்சனாவுடன் பேட்டிங்கில் அசத்தக்கூடிய ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி போன்ற கடந்த சீசன்களில் கோப்பையை வெல்ல உதவிய ஸ்பின்னர்கள் பலம் சேர்க்கின்றனர்.

இறுதியாக வேகப்பந்து வீச்சுத் துறையில் 2018, 2021 கோப்பையை வெல்ல உதவிய சர்துல் தாக்கூர், தீபக் சஹார் ஆகியோர் மீண்டும் இம்முறை ஜோடி சேர்கின்றனர். அவர்களுடன் காயமடைந்துள்ள பதிரனா, முஸ்தஃபிசுர் ரஹ்மான் இல்லாத நிலையை சமாளிக்க முகேஷ் சௌத்ரி, துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் போன்ற இளம் வீரர்கள் வாய்ப்பு கிடைத்தால் கடந்த சீசன்களை போல் அசத்துவார்கள் என்று நம்பலாம்.

இதையும் படிங்க: எனது 2 மகள்களுக்காக இந்த ஹெல்ப்ப பண்ணுங்க.. சி.எஸ்.கே அணி நிர்வாகத்தின் உதவியை நாடிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

அந்த வகையில் சரியான பேலன்ஸ் இல்லாமல் சில பின்னடைவுகளை கொண்டுள்ள பஞ்சாப் அணியை இம்முறையும் எம்எஸ் தோனி தலைமையில் தோற்கடித்து கோப்பையை வெல்வதற்கான தேவையான சமநிலையும் பலமும் சிஎஸ்கே அணியிடம் உள்ளது என்றே சொல்லலாம். ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் 28 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் சென்னை 15 வெற்றிகளையும் பஞ்சாப் 13 வெற்றிகளையும் பெற்றுள்ளது.

Advertisement