தோனி, யுவி இல்ல – அவர் தான் ஆசியாவின் மகத்தான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் – முன்னாள் பாக் வீரரை பாராட்டிய சேவாக்

Sehwag
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங் துறையில் டாப் ஆர்டரில் விளையாடுவதை விட மிடில் ஆர்டரில் அசத்துவது மிகவும் கடினமாகும். அதுவும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் பவர் பிளே ஓவர்கள் என்பதால் உள்வட்டத்திற்கு வெளியே வெறும் 2 ஃபீல்டர்கள் மட்டுமே இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாகவும் விரைவாகவும் ரன்களை சேர்க்கலாம். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது பெரும்பாலான போட்டிகளில் உள்வட்டத்திற்கு வெளியே 5 ஃபீல்டர்கள் இருப்பார்கள்.

அது போக ஏற்கனவே முக்கிய சரிந்த சூழ்நிலையில் ஓவர்களும் குறைவாக இருக்கும் என்பதால் எப்படியாவது விரைவாக ரன்களை சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் அந்த இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே அந்த அழுத்தமான மிடில் ஆர்டரில் அனைவராலும் அசத்த முடிவதில்லை. சொல்லப்போனால் இந்திய கிரிக்கெட்டில் கடந்த 25 வருடங்களில் எம்எஸ் தோனி, யுவராஜ் சிங் போன்றவர்கள் தான் மிடில் ஆர்டரில் வெற்றிகரமாக செயல்பட்டனர்.

- Advertisement -

சேவாக் பாராட்டு:
இந்நிலையில் இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் தான் தம்மைப் பொறுத்த வரை மகத்தான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்று வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். குறிப்பாக தமது காலகட்டத்தில் அவர் சச்சினுக்கு நிகராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார் என்று பாராட்டும் சேவாக் இது பற்றி பிரபல யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “இன்சி பாய் மிகமிக இனிமையானவர். பெரும்பாலானவர்கள் சச்சின் டெண்டுல்கரை பற்றி பேசுவார்கள்”

“ஆனால் ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்றால் அது இன்சமாம்-உல்-ஹக் என்று நம்புகிறேன். பொதுவாக சச்சினை நாம் மற்ற பேட்ஸ்மேன்களை விட மேலே உயர்த்தி பார்ப்போம். குறிப்பாக அவரை நாம் மற்ற பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிடுவதில்லை. சொல்லப்போனால் அவரை நாம் மனிதராக பார்க்காமல் கடவுளாக பார்க்கிறோம். அதே போல இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இன்சமாமை விட மகத்தான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை நான் பார்த்ததில்லை”

- Advertisement -

“2003 – 2004 காலகட்டங்களில் ஓவருக்கு 8 ரன்கள் தேவைப்பட்டாலும் அவர் “கவலைப்படாதீர்கள் நான் இதை எளிதாக அடிப்பேன்” என்று கூறுவார். அதாவது 10 ஓவரில் 80 ரன்கள் தேவைப்பட்டால் அந்த சமயத்தில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் பதற்றமடைவார்கள். ஆனால் அவரோ கவலைப்படாதீர்கள் “நம்மால் அடிக்க முடியும்” என்ற நம்பிக்கையுடன் விளையாடுவார்” என்று கூறினார். அதை விட 2005இல் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்பதற்காக பவுண்டரி எல்லையில் இருக்கும் ஃபீல்டரை உள்ளே கொண்டு வாருங்கள் என்று தம்முடைய ஜாலியான கோரிக்கையை ஒரு போட்டியில் நிறைவேற்றிய இன்சமாம் குணத்தை பற்றி சேவாக் பேசியது பின்வருமாறு.

“2005இல் நடைபெற்ற ஒரு போட்டியில் ரவுண்டு தி விக்கெட் திசையிலிருந்து டேனிஷ் கனேரியா எனது கால்களில் பந்து வீசி என்னை அதிரடியாக ரன்கள் எடுப்பதை தடுக்க முயற்சித்தார். அதனால் நானும் ஒரு சில ஓவர்கள் கட்டுப்பாடுடன் விளையாடினேன். அப்போது “இப்படியே பந்து வீசினால் நானும் எவ்வளவு நேரம் தான் தாங்குவது? என்னுடைய கால்கள் வலிக்கிறது இன்சி பாய். லாங் ஆன் ஃபீல்டரை உள்ளே கொண்டு வாருங்கள்” என்று சொன்னேன். அதற்கு அப்படி செய்தால் என்ன செய்வீர்கள் என்று அவர் என்னிடம் கேட்டார்”

- Advertisement -

“அப்போது நான் சிக்ஸர் அடிப்பேன் என்று சொன்னேன். அதற்கு “ஜோக் செய்கிறீர்களா” என்று என்னிடம் கேட்ட அவரிடம் “சிக்ஸர் அடிக்க தவறினால் அந்த ஃபீல்டரை மீண்டும் அங்கேயே வையுங்கள் என்று சொன்னேன்” அதைத்தொடர்ந்து அவரும் ஒரு ஃபீல்டரை உள்ளே கொண்டு வந்தார். அப்போது கனேரியா வீசிய கூக்லியை நான் சிக்ஸராக அடித்தேன். அதனால் இன்சி பாய் ஏன் அந்த ஃபீல்டரை உள்ளே கொண்டு வந்தீர்கள் என்று கனேரியா கோபத்தை வெளிப்படுத்தினார். அதற்கு அவரை இங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசாதே இல்லையென்றால் வெளியே அனுப்பி விடுவேன் என்று இன்சமாம் எச்சரித்தார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:WTC Final : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மழையால் ரத்தானால் என்ன நடக்கும் – ரூல்ஸ் சொல்வது என்ன?

அவர் கூறுவது போல 8830 டெஸ்ட், 11739 ஒருநாள் ரன்களை எடுத்த இன்சமாம் மிகச் சிறந்த மிடில் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் உடல் எடைக்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதையும் நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement