இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே பகை இல்லை : நிரூபித்த கிரிக்கெட் வீராங்கனைகள்

Indian Women Cricketers Takes Selfie With Pakistan Captain Mahroof and Her Daughter
- Advertisement -

நியூஸிலாந்து நாட்டில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற உலகின் டாப் 8 அணிகள் 31 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த உலக கோப்பையில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் நேற்று பாகிஸ்தானை எதிர்கொண்டது.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக தொடர்ந்து ஏற்கனவே 5 போட்டிகளில் விளையாடி இந்த உலக கோப்பையில் களமிறங்கிய இந்தியாவின் நட்சத்திர அனுபவ வீராங்கனை மற்றும் கேப்டன் மிதாலி ராஜ் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் 6 உலக கோப்பைகளில் விளையாடிய முதல் வீராங்கனை என்ற உலக சாதனை படைத்தார். இதையடுத்து துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

இந்தியா வெற்றி:
இதை அடுத்து பேட்டிங்கை துவங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 244/7 ரன்களை போராடி எடுத்தது. இந்தியா சார்பில் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 52 ரன்கள் எடுக்க அடுத்து வந்த கேப்டன் மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் போன்ற முக்கிய வீராங்கனைகள் சொதப்பினார்கள். இருப்பினும் கடைசி நேரத்தில் அபாரமாக பேட்டிங் செய்த பூஜா வஸ்திரக்கர் 67 ரன்களும், ஸ்னே ராணா 52* ரன்களும் எடுத்தனர்.

இதை அடுத்து 245 என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் இந்தியாவின் தரமான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் கேப்டன் பீஷ்மா மஹ்ரூப் உள்ளிட்ட யாரும் பெரிய அளவில் ரன்கள் குவிக்க தவறியதால் 43 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி வெறும் 137 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 107 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா புள்ளிப் பட்டியலில் 2 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து இந்த உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது. மேலும் இதன் வாயிலாக மகளிர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக பங்கேற்ற 11 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வி அடையாமல் சரித்திரம் படைத்தது.

- Advertisement -

பாகிஸ்தான் குழந்தையை கொஞ்சிய இந்தியா:
முன்னதாக பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டன் கேப்டன் பீஷ்மா மஹ்ரூப் தமக்கு பிறந்து 7 மாதங்களே நிறைந்த பெண் குழந்தையுடன் இந்த உலக கோப்பையில் பங்கேற்று வருகிறார். அப்படிப்பட்ட நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் தமது குழந்தையுடன் அவர் பெவிலியனில் ஹோட்டலுக்கு திரும்புவதற்காக காத்திருந்தார். அதை பார்த்த இந்திய வீராங்கனைகள் உடனடியாக அங்கே சென்று பாகிஸ்தான் கேப்டன் மற்றும் அவரின் குழந்தையுடன் பேசி மகிழ்ந்தார்கள்.

குறிப்பாக பாத்திமா எனும் அந்த 7 மாத செல்லக் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த இந்திய வீராங்கனைகள் நீண்ட நேரமாக அந்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் பாகிஸ்தான் கேப்டன் பீஷ்மா மஹ்ரூப் மற்றும் 7 மாத குழந்தையை மையப்படுத்தி அவர்களை சுற்றி நின்று இந்தியாவின் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உள்ளிட்ட அனைத்து இந்தியா வீராங்கனைகளும் செல்பி எடுத்து மகிழ்ந்தார்கள்.

- Advertisement -

சண்டை இல்லை:
இந்த நிகழ்வு பற்றிய புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்களும், முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள். ஏனென்றால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 அண்டை நாடுகளுக்கு இடையே கடந்த பல வருடங்களாக எல்லை மற்றும் தீவிரவாத சம்பந்தமான சண்டைகளும் சச்சரவுகளும் பதற்றமும் இருந்து வருகிறது.

இதையும் படிங்க : அஷ்வினை பாக்கும்போதெல்லாம் எனக்கு இந்த வியப்பு எப்போதுமே இருக்கும் – ரோஹித் சர்மா புகழாரம்

இதன் காரணமாக இரு நாட்டைச் சேர்ந்தவர்களும் தங்களை ஒருவருக்கொருவர் எதிரிகளாக பாவித்து வருகிறார்கள். சொல்லப்போனால் இந்த எதிரியாக நினைக்கும் எண்ணம் கிரிக்கெட் போன்ற விளையாட்டையும் விட்டு வைக்கவில்லை. ஆம் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் எல்லை பிரச்சினை காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் கடந்த பல வருடங்களாக நேருக்கு நேர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதில்லை. ஐசிசி நடத்தும் உலக கோப்பை போன்ற தொடர்களில் மட்டும் வேண்டா வெறுப்பாய் வேறு வழியின்றி மோதி வருகின்றன.

அப்படிப்பட்ட இந்த நிலையில் பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டனின் அழகு செல்ல குழந்தையை இந்திய வீராங்கனைகள் கொஞ்சி மகிழ்ந்தது இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அனைவரும் சண்டை போட விரும்பவில்லை என்பதை காட்டுகிறது. மேலும் இதன் வாயிலாக இந்தியா – பாகிஸ்தான் சண்டை என்பதை தாண்டி மனிதநேயம் என்ற ஒன்று இன்னும் உள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.

Advertisement