என்னய்யா பித்தலாட்டமா இருக்கு? தோத்தாலும் மீசையை முறுக்கி பாக், வங்கதேசத்தை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள் – காரணம் இதோ

IND vs PAK A Sai Sudharsan
- Advertisement -

இலங்கையில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2023 தொடர் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதில் 2022 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற யாஷ் துள் தலைமையில் லீக் சுற்றில் அமீரகம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை தோற்கடித்த இந்தியா ஏ அணி செமி ஃபைனலில் வங்கதேசத்தை வீழ்த்தி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் இந்தியாவிடம் இருந்தாலும் அமீரகம் மற்றும் நேபாள் ஆகிய பலவீனமான அணிகளை தோற்கடித்து செமி ஃபைனலில் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான் ஜூலை 23ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 352/8 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தயாப் தாஹிர் 108 (71) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரியன் பராக், ராஜ்வரதன் ஹங்கர்கேக்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 353 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு லீக் சுற்றில் இதே பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து வெற்றி பெற வைத்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 3வது நடுவரின் கண்மூடித்தனமான தீர்ப்பால் நோ-பாலில் 29 ரன்களில் அவுட்டாகி சென்றார். அடுத்ததாக வந்த நிகின் ஜோஸ் எட்ஜ் கொடுக்காத போதிலும் 11 ரன்களில் மீண்டும் நடுவர் கொடுத்த தவறான தீர்ப்பால் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

கலாய்க்கும் ரசிகர்கள்:
அப்படி ஆரம்பத்திலேயே அம்பயர்களின் தவறான தீர்ப்பால் பாதி வீழ்த்தப்பட்ட இந்தியாவுக்கு ரன்ரேட் எகிறிய அழுத்தத்தில் மறுபுறம் போராடிய அபிஷேக் ஷர்மா 61 (51) ரன்களில் அவுட்டாக மிடில் ஆர்டரில் கேப்டன் யாஷ் துள் 39, நிஷாந்த் சிந்து 10, துருவ் ஜுரேல் 9, ரியன் பராக் 14 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 40 ஓவர்களில் இந்தியாவை 224 ரன்களுக்கு சுருட்டி 128 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் ஏ அணி 2023 வளரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை வென்று சாதனை படைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சுபியன் முஹிம் 3 விக்கெட்டுகளை சாய்ந்தார். முன்னதாக ஆசிய கண்டத்தில் இருக்கும் தரமான இளம் வீரர்களை முன்கூட்டியே கண்டறியும் நோக்கத்திலேயே இந்த தொடர் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த நிலைமையில் இந்திய அணியில் யாஷ் துள், சாய் சுதர்சன் உட்பட களமிறங்கிய அத்தனை வீரர்களும் இதற்கு முன் ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடிய அனுபவத்தை கொண்டிருக்கவில்லை.

- Advertisement -

அப்படி சர்வதேச அளவில் விளையாடி அனுபவம் இல்லாமலேயே ஃபைனல் வரை வந்து அம்பயர்களின் தவறான தீர்ப்பால் போராடி தோற்ற இளம் வீரர்களால் இந்திய ரசிகர்கள் பெருமையுடன் மீசையை முறுக்கி பாராட்டுகிறார்கள் என்றே சொல்லலாம். ஆனால் மறுபுறம் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் கேப்டன் முகமது ஹரிஷ் 14 போட்டிகள், முகமது வாசிம் 43 போட்டிகள் என மொத்தமாக இதற்கு முன் ஏற்கனவே 81 சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

அதை விட இந்த தொடரே வளர்ந்து வரும் இளம் வீரர்களை அடையாளப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் இப்போட்டியில் சதமடித்த தாயப் தாஹிர் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் கேப்டனாக இருக்கும் பாபர் அசாமை (28) விட 29 வயதுடன் அதிக வயது கொண்ட சீனியர் வீரராக திகழ்கிறார். அதே போல இளம் அணி என்ற பெயரில் பாகிஸ்தான் ஏ அணியில் இருந்த பெரும்பாலான வீரர்கள் அதிக வயதுடையவர்களாகவே இருக்கின்றனர்.

- Advertisement -

மறுபுறம் இந்திய அணியில் எந்த விரருமே 25 வயதை தாண்டியவர்களாக இல்லை என்பது இந்திய ரசிகர்களை பெருமைப்படுத்தும் மற்றொரு அம்சமாகும். இவை அனைத்தையும் விட இதே தொடரில் 2019 உலகக் கோப்பை உட்பட மொத்தமாக 145 சர்வதேச போட்டிகளில் விளையாடிய சௌமியா சர்க்கார் 30 வயதில் வங்கதேச ஏ அணிக்காக விளையாடினார்.

இதையும் படிங்க:Ashes 2023 : ஆஸி எஸ்கேப், கைக்கு கிடைத்த இங்கிலாந்தின் வெற்றியை காலி செய்த மழை – ஆஷஸ் கௌரவத்தை வென்றது யார் தெரியுமா

அந்த வகையில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான தொடரில் ஏராளமான சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவமும் மூத்த வயதையும் கொண்ட வீரர்களை களமிறக்கிய பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் “என்னய்யா பித்தலாட்டமா இருக்கு” என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement