Ashes 2023 : ஆஸி எஸ்கேப், கைக்கு கிடைத்த இங்கிலாந்தின் வெற்றியை காலி செய்த மழை – ஆஷஸ் கௌரவத்தை வென்றது யார் தெரியுமா

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் கையில் வைத்திருந்த வெற்றிகளை கோட்டை விட்டதால் சொந்த மண்ணில் தலை குனிந்த இங்கிலாந்து விமர்சனத்திற்குள்ளானது. இருப்பினும் கடந்த காலங்களில் பாகிஸ்தானை 3 – 0 என்ற கணக்கில் தோற்கடித்த தங்களால் இப்போதும் இத்தொடரை வெல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த பென் ஸ்டோக்ஸ் தலைமையில் கொதித்தெழுந்த இங்கிலாந்து 3வது போட்டியில் போராடி வென்று தக்க பதிலடி கொடுத்தது.

அந்த நிலைமையில் இத்தொடரின் முக்கியமான 4வது போட்டி ஜூலை 19ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 317 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ், மார்னஸ் லபுஸ்ஷேன் தலா 51 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து மீண்டும் அதிரடியாக விளையாடி 592 ரன்கள் விளாசி அட்டகாசம் செய்தது

- Advertisement -

வெற்றியை பறித்த மழை:
அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி அதிரடியாக 189 (182) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் ஜானி பேரஸ்டோ சரவெடியாக 99* (81) ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 5 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 275 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா கவாஜா 18, வார்னர் 28, ஸ்மித் 17, டிராவிஸ் ஹெட் 1 என முக்கிய வீரர்கள் இங்கிலாந்தின் அனல் பறந்த பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 108/4 என தடுமாறியது.

இருப்பினும் நம்பிக்கை நட்சத்திரம் மார்னஸ் லபுஸ்ஷேன் சதமடித்து 111 ரன்கள் எடுத்தும் 4வது நாள் முடிவில் 214/5 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 61 ரன்கள் பின்தங்கியிருந்தது. அதன் காரணமாக கடைசி நாளில் நிச்சயமாக இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு 90% பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டதால் அந்நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் 4வது நாளிலேயே பாதி ஆட்டத்தை நிறுத்திய மழை 5வது நாளில் காலையிலிருந்தே முழுவதுமாக வந்து மொத்தமாக தடுத்தது.

- Advertisement -

இறுதியில் காலை முதல் மாலை வரை காத்திருந்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு செவி சாய்க்காத மழை தொடர்ந்து பெய்ததால் இந்த போட்டி டிராவில் முடிவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதன் காரணமாக கிட்டத்தட்ட போராடி கையில் கொண்டு வந்த வெற்றியை இங்கிலாந்து சுவைக்க முடியாமல் மழை வந்து கெடுத்தது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் 2 – 1 என்ற கணக்கில் பின் தங்கியிருப்பதால் இப்போட்டியில் வென்றால் மட்டுமே இந்த ஆஷஸ் கௌரவத்தை வெல்ல முடியும் என்ற பரிதாபத்திற்கு இங்கிலாந்து தள்ளப்பட்டது.

ஆனால் அது நடக்காமல் போனதால் தற்போது ஆஷஸ் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்ட இங்கிலாந்து கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துள்ளது. குறிப்பாக கடைசியாக கடந்த 2001இல் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அதன் பின் கடந்த 22 வருடங்களாக ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் தோற்காமல் இருந்து வருகிறது. அதனால் கடைசி போட்டியில் வென்று குறைந்தபட்சம் அந்த கௌரவத்தைக் காப்பாற்ற இங்கிலாந்து போராட உள்ளது.

இதையும் படிங்க:IND vs WI : ஜெயவர்த்தேனேவின் தனித்துவ சாதனையை உடைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா – டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை

அத்துடன் பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் இதுவரை பெரும்பாலும் வெற்றிகள் ஓரிரு தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து முதல் முறையாக தற்போது டிராவை சந்தித்துள்ளது. மறுபுறம் கடந்த ஆஷஸ் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியனாக இருப்பதன் காரணமாக அந்த கோப்பையை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக இப்போட்டி டிராவில் முடிந்த காரணத்தால் ஒருவேளை கடைசி போட்டியில் தோற்றாலும் ஆஸ்திரேலியாவே 2 – 2* (5) என்ற கணக்கில் ஆஷஸ் சாம்பியனாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement