இவரா ஐபிஎல் ஏலத்தில் 15 கோடிக்கு போவாரு? பாபர் அசாமை கலாய்த்து தள்ளும் இந்திய ரசிகர்கள் – காரணம் இதோ

Babar-Azam
- Advertisement -

பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் கடந்த 2017ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி கடந்த 2019 முதல் 3 வகையான கிரிக்கெட்ளிலும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். குறிப்பாக 2019க்குப்பின் விராட் கோலி ஃபார்மை இழந்து தடுமாறிய வேளையில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய பாபர் அசாம் ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் அவரை மிஞ்சி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறினார். அதனால் விராட் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்று பாராட்டிய அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் ஒரு கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், டான் பிராட்மேனை விட சிறந்தவர் என்று கொண்டாடினார்கள்.

ஆனால் நாளடைவில் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதிரடியாக விளையாட வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவருடைய சுமாரான பேட்டிங் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் நம்பர் ஒன் இடத்தையும் இழந்த அவர் அணி நலனுக்காக ஓப்பனிங் இடத்தை இளம் வீரர்களுக்கு கொடுத்து விட்டு மிடில் ஆர்டரில் விளையாட வேண்டும் என்று வாசிம் அக்ரம், கெளதம் கம்பீர் போன்ற முன்னாள் வீரர்கள் வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டனர்.

- Advertisement -

விலைபோகாத பாபர்:
ஆனால் தொடர்ந்து சுயநலமாக அதே இடத்தில் விளையாடி வரும் அவர் சமீபத்திய பிஎஸ்எல் தொடரில் ஒரு போட்டியில் சதமடிப்பதற்காக மெதுவாக விளையாடியது இறுதியில் தோல்வியை கொடுத்தது. அதனால் சதத்துக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடுங்கள் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் வெளிப்படையாக விமர்சித்தது உலக அளவில் வைரலானது. இருப்பினும் பாபர் அசாம் தான் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்றும் அவர் மட்டும் கோடிகளை கொட்டிக் கொடுக்கும் ஐபிஎல் தொடரின் ஏலத்தில் பங்கேற்றால் விராட் கோலி, கேஎல் ராகுல், ரோகித் சர்மா போன்ற டாப் இந்திய வீரர்களை மிஞ்சி 15 – 20 கோடி வரை விலை போவார் என்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் பேசி வருவதை அனைவரும் அறிவோம்.

அந்த நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் ஹண்ட்ரட் தொடரின் அடுத்த சீசனில் டிராப்ட் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களின் உத்தேச பட்டியில் பாபர் அசாம் 25% அதிக தொகைக்கு விலை போவார் என்று ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் மார்ச் 24ஆம் தேதியன்று நடைபெற்ற ட்ராப்ட் ஏலத்தில் பாபர் அசாமை எந்த அணியும் அடிப்படை விலைக்கு கூட வாங்கவில்லை என்பது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஆச்சரியமாக அமைந்தது.

- Advertisement -

அதே போல பாகிஸ்தானின் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் விக்கெட் கீப்பரான முகமது ரிஸ்வானையும் எந்த அணியும் அடிப்படை விலைக்கு கூட வாங்கவில்லை. இருப்பின் ஷாஹின் அப்ரிடி, ஹரீஸ் ரவூப் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் முறையே 1,00,000 மற்றும் 60,000 யூரோவுக்கு வாங்கப்பட்டார்கள். மொத்தத்தில் பாகிஸ்தானின் டாப் 2 பேடஸ்மேன்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் அடிப்படை விலைக்கு கூட ஏலம் போகவில்லை.

அதை அறிந்த இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானில் நடைபெறும் பிஎஸ்எல் தொடரை தவிர்த்து வெளிநாடுகளில் ஏலம் போகாத பாபர் அசாம் உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானித்து வரும் ஐபிஎல் தொடரில் அதுவும் 15 கோடிக்கு விலை போவார் என்று இனிமேல் தயவு செய்து சொல்லாதீர்கள் என பாகிஸ்தான் ரசிகர்களை தாறுமாறாக கலாய்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க:சச்சின், மெஸ்ஸி மாதிரி வெய்ட் பண்ணா இந்தியாவுக்கு அந்த வெற்றி கூரைய பிச்சிகிட்டு கொட்டும் – ரவி சாஸ்திரி அதிரடி பேட்டி

அத்துடன் தடவலாக பேட்டிங் வீரரை வாங்கி என்ன செய்யப் போகிறோம் என்று தான் இங்கிலாந்தின் எந்த அணியும் விவரத்துடன் பாபர் அசாமை வாங்கவில்லை என்றும் நிறைய ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். ஆனால் இப்படி இருந்தும் உலகிலேயே ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல், பிக்பேஷ் தொடர் தான் சிறந்தது என்று சமீபத்தில் தெரிவித்த பாபர் அசாமை இந்த சமயம் பார்த்து இந்திய ரசிகர்கள் தாறுமாறாக கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement