WTC Final : மறுபடியும் அந்த அம்பயரா? அப்டினா இந்தியா கப் ஜெயிக்க போறதில்ல, இந்திய ரசிகர்கள் சோகம் – நடந்தது என்ன

DRS Review Umpire
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தின் லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் கோப்பையை வெல்ல பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதற்காக அறிவிக்கப்பட்ட ரோகித் தலைமையிலான இந்திய அணியினர் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியதும் படிப்படியாக இங்கிலாந்துக்கு சென்று தீவிர வலை பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஃபைனலில் டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஃபைனலில் விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் தோற்று நழுவ விட்ட கோப்பையை இம்முறை ரோகித் சர்மா தலைமையில் எப்படியாவது வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சந்தித்து வரும் மோசமான தோல்விகளுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைக்குமா என்பதே இந்திய ரசிகர்களின் முதன்மையான எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் சோகம்:
இந்நிலையில் இந்த மாபெரும் இறுதிப் போட்டியில் தராசு முள்ளாக நின்று சரியான தீர்ப்புகளை வழங்கப் போகும் நடுவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன் படி வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் ரிச்சி ரிச்சர்ட்சன் இந்த போட்டியை கண்காணிக்கும் நடுவராக செயல்பட உள்ளார். அதே போல் நேரடி தீர்ப்புகளை வழங்கும் கள நடுவர்களாக இங்கிலாந்தின் கிறிஸ் கேஃப்னி மற்றும் ரிச்சர்ட் இல்லிங்ஒர்த் ஆகியோர் செயல்படுவார்கள் என ஐசிசி கூறியுள்ளது. அத்துடன் டிஆர்எஸ் போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் 3வது நடுவராக ரிச்சர்ட் கேட்டல்ப்ரோக் அவர்களும் 4வது நடுவராக இலங்கையின் சர்ச்சை நடுவர் குமார் தர்மசேனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 2019 உலக கோப்பையில் நியூசிலாந்தின் வெற்றியை தவறான முடிவால் தாரை வார்த்த குமார் தர்மசேனா களத்திற்கு வரமாட்டார் என்பதால் நிம்மதியடையும் இந்திய ரசிகர்களுக்கு ரிச்சர்ட் கெட்டல்ப்ரோக் டிஆர்எஸ் முடிவுகளை மறுபரிசீலனை செய்யும் 3வது நடுவராக செயல்படப் போகிறார் என்பது வயிற்றில் புளியை கரைக்கிறது. ஏனெனில் கடைசியாக கடந்த 2013இல் எம்எஸ் தோனி தலைமையில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வென்றதை அனைவரும் அறிவோம்.

- Advertisement -

ஆனால் அதன் பின் வங்கதேசத்தில் நடைபெற்ற 2014 டி20 உலக கோப்பையில் இலங்கையிடம் ஃபைனலில் இந்தியா தோற்ற போட்டியில் கள நடுவராக செயல்பட்ட அவர் மீண்டும் 2015 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் செமி ஃபைனலில் தோல்வியை சந்தித்த போட்டியிலும் செயல்பட்டிருந்தார். அத்துடன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2016 டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் எதிரான செமி ஃபைனலில் இந்தியா தோல்வியை சந்தித்த போட்டியில் கள நடுவராக செயல்பட்ட அவர் 2017இல் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் மாபெரும் இறுதிப்போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் மண்ணைக் கவ்விய போதும் களத்தில் நின்று தீர்ப்புகளை வழங்கினார்.

அதே போல் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் இந்தியா தோல்வியை சந்தித்த போதும் அவரே நடுவராக செயல்பட்டார். அதை விட அந்த போட்டியில் தோனி ரன் அவுட்டான போது ஏமாற்றமான ரியாக்சன் கொடுத்துக்கொண்டே அவர் சிக்னல் செய்ததை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. அப்படி 2014 – 2019 வரை தொடர்ந்து ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் அவர் நடுவராக செயல்பட்ட போதெல்லாம் ஏதோ ஒரு வகையில் இந்தியா சொதப்பி தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க:IPL 2023 : ஃபைனலில் தோனி கோல்டன் டக் அவுட்டானாலும் அதுல சொதப்பிருந்தா சிஎஸ்கே ஜெயிச்சுருக்காது – மஞ்ரேக்கர் பாராட்டு

இருப்பினும் இம்முறை 3வது நடுவராகத்தானே செயல்படுகிறார் தப்பித்தோம் என்று சில ரசிகர்கள் நினைக்கலாம். ஆனால் சௌதம்டன் நகரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவர் தான் களத்திற்கு வெளியே 3வது நடுவராக செயல்பட்டார். அந்த வகையில் இப்போதும் அதே போல இந்த போட்டியில் அவர் நடுவராக செயல்படுவதால் கவலையடைந்துள்ள இந்திய ரசிகர்கள் இம்முறையும் கோப்பை நமக்கில்லை என்று ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

Advertisement