எல்லாரும் இந்தியா ஆகிட முடியுமா? 2 நாளில் தெ.ஆ’வை சுருட்டிய ஆஸ்திரேலியா, இந்திய ரசிகர்கள் பெருமைப்பட காரணம் என்ன

AUS vs RSA Rabada Cummins
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த தென்னாபிரிக்கா மீண்டும் அந்நாட்டிற்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் 2023 ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் ஃபைனலுக்கு செல்ல இத்தொடரை நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இவ்விரு அணிகளும் களமிறங்கியுள்ளன. அந்த நிலையில் டிசம்பர் 17ஆம் தேதியன்று பிரிஸ்பேன் நகரில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா பச்சை புற்கள் அதிகமாக இருந்த பிட்ச்சில் ஆஸ்திரேலியாவின் மிரட்டலான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களுக்கு சுருண்டது. டீன் எல்கர் 3, எர்வீ 10, டுஷன் 5, ஜூண்டோ 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக கெய்ல் வேரின் 64 ரன்கள் எடுத்தார். அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார், நேதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

இந்தியா ஆகிட முடியுமா:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் மிரட்டலாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்காவின் ரபாடா முதல் பந்திலேயே டேவிட் வார்னரை கோல்டன் டக் அவுட்டாக்கினார். அடுத்து வந்த கவாஜா 11, லபுஸ்ஷேன் 11 என முக்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 27/3 என தடுமாறிய ஆஸ்திரேலியாவை 4வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்களிலும் டிராவீஸ் ஹெட் 92 ரன்களிலும் அவுட்டானார்கள்.

அடுத்து வந்த வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி ஆஸ்திரேலியாவை 218 ரன்களுக்கு கட்டுப்படுத்திய தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா 4 விக்கெட்டுகளையும் மார்க்கோ யான்சன் 3 விக்கெட்டுகளின் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 66 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸை விட அனல் பறக்க பந்து வீசிய ஆஸ்திரேலியவிடம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து பெட்டிப் பாம்பாக வெறும் 99 ரன்களுக்கு அடங்கியது.

- Advertisement -

எர்வீ 3, கேப்டன் டீன் எல்கர் 2, டுஷன் 0, கெய்ல் வேரின் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜோண்டோ 36* ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் தெறிக்க விட்ட ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 5 விக்கெட்டுகளையும் மிட்சேல் ஸ்டார்க் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர். இறுதியில் 34 என்ற சிறிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு சுமாரான பார்மில் தவிக்கும் டேவிட் வார்னர் 3, உஸ்மான் கவாஜா 2 என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே ராபாடாவிடம் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி சென்றார்கள்.

அத்துடன் டிராவிஸ் ஹெட் டக் அவுட்டானதால் பரபரப்பு ஏற்பட்டாலும் இலக்கு குறைவாக இருந்ததால் ஸ்டீவ் ஸ்மித் 6, லபுஸ்ஷேன் 5* ரன்கள் எடுத்ததால் 35/4 ரன்கள் (எக்ஸ்ட்ராஸ் 19 ரன்கள்) எடுத்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. பேட்டிங்கில் சொதப்பிய தென்னாபிரிக்கா சார்பில் ரபாடா 4 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி பெற முடியவில்லை.

- Advertisement -

முன்னதாக இப்போட்டி நடைபெறும் காபா மைதானத்தில் 1989ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றாலும் அதன் பின் தொடர்ந்து தோற்காமல் 32 வருடங்களாக ஆஸ்திரேலியா வெற்றி நடை போட்டது. இருப்பினும் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் கடைசி போட்டியில் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தடுத்து நிறுத்திய இந்தியா காபா கோட்டையை தகர்த்து மூவர்ண கொடியை பறக்க விட்டது.

இதையும் படிங்க: விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ள ராசியில்லா இந்திய வீரர் – விவரம் இதோ

ஆனால் அதன் பின் இங்கிலாந்தை மீண்டும் தோற்கடித்த ஆஸ்திரேலியா தற்போது தென்னாப்பிரிக்காவையும் தோற்கடித்து காபாவை தனது கோட்டையாக நிரூபித்து வருகிறது. அதனால் காபாவில் வெற்றி பெற எல்லோரும் இந்தியா ஆகிவிட முடியாது என்று இந்திய ரசிகர்கள் பெருமை கொள்கிறார்கள்.

Advertisement