- Advertisement -
இந்திய கிரிக்கெட்

97 ரன்ஸ்.. முத்தரப்பு ஃபைனலில் இலங்கையை சாய்த்து 2024 தோல்விக்கு.. பழி தீர்த்த இந்தியா சாம்பியன்

இலங்கை, இந்தியா, தென்னாபிரிக்கா அணிகள் மோதிய மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மே 11ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்றது. கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த அந்தத் தொடரில் லீக் சுற்றில் 3 வெற்றிகளைப் பெற்ற இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. இலங்கை 2வது இடத்தை பிடித்த நிலையில் தென்னாப்பிரிக்கா லீக் சுற்றுடன் வெளியேறியது.

அந்த நிலையில் இன்று கொழும்புவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்ட இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவரில் அபாரமாக விளையாடி 342/7 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ஸ்ம்ரிதி மந்தனா அபாரமாக விளையாடி சதத்தை அடித்து 116 (101) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

இந்தியா அசத்தல்:

அவருடன் பிரதிகா ராவல் 30, ஹர்லீன் தியோல் 47, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 41, ஜெமிமா ரோட்ரிகஸ் 44 (29) ரன்கள் விளாசி இந்தியாவை வலுப்படுத்தினர். இலங்கை அணிக்கு அதிகபட்சமாக மல்கி மதரா 2, தேவ்மி விகாங்கா 2, சுகந்திகா குமாரி 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அடுத்ததாக விளையாடிய இலங்கைக்கு ஹாசினி பெரேரா ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

அதனால் நிதானமாக விளையாடிய விஷ்மி குணரத்னே 36 (41) ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருடன் சேர்ந்து நிதானமாக விளையாடிய கேப்டன் சமாரி அட்டப்பட்டு அதை சதத்தை அடித்த போதிலும் 51 (66) ரன்னில் ஆட்டமிழந்தார். மிடில் ஆர்டரில் நீலாக்சி டீ சில்வா 48 (58) ரன்கள் அடித்துப் போராடி அவுட்டானார்.

- Advertisement -

இந்தியா பதிலடி வெற்றி:

அதே போல ஹர்ஷிதா சமரவிக்ரமா 26, அனுஷ்கா சஞ்சீவினி 28 ரன்கள் எடுத்த போதிலும் அதைப் பெரிய ரன்களாக மாற்ற தவறினர். இறுதியில் சுகந்திகா குமாரி 27 ரன்கள் எடுத்தும் 48.2 ஓவரில் 245 ரன்களுக்கு இலங்கையை சுருட்டிய இந்தியா 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு அமன்ஜோத் கௌர் 3, ஸ்னே ராணா 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.

இதையும் படிங்க: இந்தியாவை விட்டு யாரும் போக வேணாம்.. பஞ்சாப் வீரர்களை தக்கவைத்த ரிக்கி பாண்டிங் – இந்த மனுஷன் வேறலெவல்

இந்த வெற்றியால் இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து முத்தரப்பு தொடரின் கோப்பையை இந்திய மகளிரணி வென்று சாதனை படைத்தது. மேலும் 2024 ஆசிய கோப்பையில் இந்தியாவை தங்களுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து இலங்கை கோப்பையை வென்றது. தற்போது இத்தொடரில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்துள்ள இந்தியா அந்த தோல்விக்கு பழி தீர்த்து கோப்பையை முத்தமிட்டுள்ளது.

- Advertisement -