ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை தாங்கள் விளையாடிய 11 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் 15 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளது. கடைசியாக மே 8-ஆம் தேதி டெல்லி அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் அவர்கள் விளையாடிய வேளையில் அந்த போட்டியில் பாதியிலேயே தடைபட்டது.
பஞ்சாப் கிங்ஸ் வீரர்களை இந்தியாவிலேயே தங்கவைத்த ரிக்கி பாண்டிங் :
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதட்டமான போர் சூழல் காரணமாக தரம்சாலாவில் நடைபெற்ற அந்த பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஒரு வார காலம் தற்காலிகமாக இந்த ஐ.பி.எல் தொடரானது நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடரானது துவங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் வேளையில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான அந்தப்போட்டி முதல் பந்தில் இருந்தே மீண்டும் ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் நிலவி வரும் பதட்டமான சூழல் காரணமாக தற்காலிகமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேளையில் அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தங்களது வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.
ஆனால் பஞ்சாப் அணியை சேர்ந்த வெளிநாட்டு வீரர்களை மட்டும் அவர்களது நாட்டிற்கு செல்ல விடாமல் ரிக்கி பாண்டிங் டெல்லியில் தங்க வைத்துள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி : பஞ்சாப் அணியை சேர்ந்த மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ஆரோன் ஹார்டி, ஜாஸ் இங்கிலீஸ், சேவியர் பேர்லட் போன்ற வெளிநாட்டு வீரர்களும் இங்குள்ள சூழ்நிலை காரணமாக தாயகம் திரும்ப நினைத்த வேளையில் அவர்களிடம் பேசிய டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இங்குள்ள சூழல் தற்காலிகமானது தான் என்றும் நிச்சயம் ஐபிஎல் தொடர் மீண்டும் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவசரப்பட்டு யாரும் நாடு திரும்ப வேண்டாம் நிச்சயம் நிலைமை எல்லாம் சரியாகி மீண்டும் ஐபிஎல் தொடர் நடைபெறும். அதுவரை நீங்கள் என்னுடைய பாதுகாப்பில் டெல்லியில் தங்குங்கள் என ரிக்கி பாண்டிங் வெளிநாட்டு வீரர்களுக்கு உறுதி கொடுத்து சமாதானம் செய்து அவருடன் தங்க வைத்துள்ளார்.
இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் பஞ்சாப் அணி இம்முறை ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலும், ரிக்கி பாண்டிங்கின் வழிகாட்டுதலுக்கு கீழ் சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் இம்முறை எப்படியாவது கோப்பையை கைப்பற்றி விட வேண்டும் என நினைத்தே அவர் இந்த விடயத்தை செய்துள்ளார் என்பதை இந்த செயல் வெளிக்காட்டுகிறது.
இதையும் படிங்க : நீங்களே குடுத்தாலும் எனக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வேணாம்.. நிராகரித்த பும்ரா.. காரணம் என்ன? – விவரம் இதோ
பஞ்சாப் அணியை சேர்ந்த மார்க்கோ யான்சன் மட்டும் தற்போது துபாய்க்கு சென்றுள்ள வேளையில் மற்ற வீரர்களை இந்தியாவிலேயே தங்க வைத்து எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் பாண்டிங் இருப்பதை இந்த செயல் வெளிகாட்டுகிறது.



