
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் இந்தியா 25 வருடங்கள் கழித்து படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 30ஆம் தேதி ராஞ்சியில் துவங்கியது. அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 349/8 ரன்களை குவித்து அசத்தியது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக விராட் கோலி சதத்தை அடித்து 145 ரன்கள் குவித்தார். அவருடன் நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் சர்மா அரை சதமடித்து 57, கேப்டன் ராகுல் 60, ரவீந்திர ஜடேஜா 32 ரன்கள் எடுத்தார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக மார்க்கோ யான்சன், நன்ரே பர்கர், கோர்பின் போஸ்க், பார்ட்மேன் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு 2வது ஓவரிலேயே ரியான் ரிக்கல்டனை கோல்டன் டக் அவுட்டாக்கிய ஹர்ஷித் ராணா அடுத்த வந்த குயிண்டன் டீ காக்கையும் டக் அவுட்டாக்கினார். போதாகுறைக்கு மறுபுறம் தடுமாறிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 7 ரன்னில் அவுட்டானதால் 11/3 என தென்னாபிரிக்கா தடுமாறியது. அப்போது மேத்தியூ பிரட்ஸ்கே நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.
மறுபுறம் அதிரடி காட்டிய டோனி டீ ஜோர்சி 39 (35) ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த தேவால்ட் ப்ரேவிஸ் அதிரடியாக விளையாடி 37 (28) ரன்கள் எடுத்த போது ராணா வேகத்தில் விக்கெட்டை இழந்தார். ஆனால் அடுத்து வந்த மார்க்கோ ஜான்சன் இந்தியாவை அடித்து நொறுக்கி 26 பந்துகளில் 50 ரன்கள் கடந்து சவாலைக் கொடுத்தார்.
மறுபுறம் மேத்தியூ தமது பங்கிற்கு அரை சதமடித்து சவாலைக் கொடுத்ததால் இந்திய அணியின் வெற்றி கேள்விக்குறியானது. அப்போது 34வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்தில் மேத்தியூவை 72 (80) ரன்னில் அவுட்டாக்கி 3வது பந்தில் யான்சென் 70 (39) ரன்களில் காலி செய்து திருப்பு முனையை உண்டாக்கினார். அதோடு நிற்காத அவர் அடுத்து வந்த சுப்புராயணனையும் 17 (16) ரன்னில் அவுட்டாக்கி அசத்தினார்.
லோயர் ஆர்டரில் வந்த கோர்பின் போஸ்க் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு பயத்தைக் கொடுத்தார். அவருக்கு கை கொடுக்கும் முயற்சித்த நன்ரே பர்கர் 17 ரன்களில் அவுட்டானார். ஆனாலும் மறுபுறம் போஸ்க் அதிரடி காட்டியதால் வெற்றியைக் நெருங்கிய தென் ஆனாப்பிரிக்காவுக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரின் 2வது பந்தில் பிரசித் கிருஷ்ணா அவரை 67 (51) ரன்னில் அவுட்டாக்கினார். அதனால் 49.2 ஓவரில் தென்னாப்பிரிக்காவை 332 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா 14 ஒய்டு உட்பட 23 எக்ஸ்ட்ரா ரன்கள் கொடுத்தது.
இதையும் படிங்க: டெஸ்ட் போட்டிகளுக்கு மீண்டும் கம்பேக் கொடுக்கிறாரா விராட் கோலி? – பி.சி.சி.ஐ செயலாளர் கொடுத்த பதில்
ஆனால் இந்தியா வெறும் 3 ஒய்டு உட்பட 6 எக்ஸ்ட்ரா மட்டுமே கொடுத்தது 17 ரன்களில் பெற்ற வெற்றியின் வித்தியாசமாக அமைந்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் 4, ராணா 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.