கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற டி20 உலககோப்பை தொடரை கைப்பற்றியதும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் ஒன்றாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் வெளியேறுவதாக அடுத்தடுத்த சில தினங்களில் தங்களது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்புகிறாரா விராட் கோலி? :
அதனை தொடர்ந்து தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வரும் அவர்கள் இருவரும் அடுத்த 2027 உலக கோப்பை தொடர் வரை விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாகவே அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனத்தை செலுத்தி விளையாடி வருகின்றனர்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் விளையாடியிருந்த அவர்கள் இருவரும் தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பிடித்து விளையாடி வருகின்றனர். தற்போது 37 வயதான விராட் கோலி இன்றளவும் தனது உடற்தகுதியில் மிகச் சிறப்பான பிட்னசுடன் உள்ளதால் இன்னும் சில ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடலாம் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன் காரணமாக அவர் ஓய்வு முடிவிலிருந்து வெளியேறி டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் திரும்ப இருக்கிறார் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில் : விராட் கோலி தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருப்பதினால் அவர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் வர இருப்பது உண்மை என்றால் கூட அதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இப்படி விராட் கோலி மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்பி வருவார் என்ற செய்தி வெளியானதும் ரசிகர்கள் மத்தியிலும் இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் விராட் கோலி மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு கம்பேக் கொடுப்பாரா? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா கூறுகையில் :
இதையும் படிங்க : விராட் கோலி சதம் அடித்ததும் கவுதம் கம்பீர் கொடுத்த ரியாக்ஷன்.. ஓய்வறையில் நடந்த சம்பவம் – விவரம் இதோ
விராட் கோலி இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் வருகிறார் என்று சொல்லப்படுவது அனைத்தும் வதந்தி தான். இந்த விவகாரம் குறித்து எந்த ஒரு பேச்சு வார்த்தையும் விராட் கோலி எங்களிடம் நடத்தவில்லை. எனவே சமூக வலைதளத்தில் வரும் வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை என இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.



