இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ள வேளையில் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காகவே இரண்டு வடிவ போட்டிகளில் இருந்து வெளியேறிய அவர் தற்போது ஒருநாள் போட்டிகளில் கவனத்தை செலுத்தி விளையாடி வருகிறார்.
விராட் கோலியை வாழ்த்திய கவுதம் கம்பீர் :
கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது முதல் இரண்டு ஆட்டங்களில் டக் அவுட்டாகிய அவர் கடைசி போட்டியில் அரைசதம் கடந்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதன்பிறகு தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.
இதன் காரணமாக இந்த தொடரில் அவரது ஆட்டம் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில் நவம்பர் 30-ம் தேதியான இன்று ராஞ்சி நகரில் நடைபெற்று வரும் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோலி 120 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 135 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அவரது இந்த சிறப்பான ஆட்டம் அவர் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது விராட் கோலி சதம் அடித்து அதனை ஆக்ரோஷமாகக் கொண்டாடியதும் ஓய்வறையில் இருந்த இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் எழுந்து நின்று அவரை பாராட்டினார்.
அதுமட்டும் இன்றி அவர் ஆட்டமிழந்து ஓய்வறைக்கு திரும்பும் போது அவரை பொன் முறுவலோடு வரவேற்ற அவர் கட்டியணைத்தும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். ஏற்கனவே கம்பீருக்கும் விராட் கோலிக்கும் இடையே விரிசல் இருப்பதாக பேசப்பட்டு வரும் வேளையில் விராட் கோலியின் இந்த சதத்தை கௌதம் கம்பீர் பாராட்டி இருப்பது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க : ரிக்கி பாண்டிங்கின் மாபெரும் சாதனை முறியடித்து வரலாறு படைத்த விராட் கோலி – விவரம் இதோ
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 52-வது சதத்தை பதிவு செய்த விராத் கோலி குறிப்பிட்ட ஒரு வடிவில் அதிக சதங்களை அடித்த வீரரான டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



