
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 376 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் சொந்த ஊரில் சதமடித்து 113, ரவீந்திர ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்கள் குவித்தனர்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சில் ஆரம்பம் முதலே திணறலாக விளையாடி 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சாத்மன் இஸ்லாம் 2, ஜாஹிர் ஹசன் 3 கேப்டன் நஜ்முல் சாண்டோ 20, மோனிமுல் ஹைக் 0, முஸ்பிகர் ரஹீம் 8 ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 32, லிட்டன் தாஸ் 22, மெஹதி ஹசன் 27* ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4, ரவீந்திர ஜடேஜா 2, ஆகாஷ் தீப் 2, சிராஜ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
ஏற்கனவே முதல் இன்னிங்சில் 6 ரன்களில் அவுட்டான அவர் 2வது இன்னிங்ஸில் வங்கதேசத்துக்கு பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் வாயிலாக கடந்த 16 வருடங்களில் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான முதல் இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா மோசமான சாதனை படைத்துள்ளார்.
மேலும் 6, 6, 21, 6, 5 என வங்கதேசத்துக்கு எதிராக ரோஹித் சர்மா ஒரு முறை கூட தமது டெஸ்ட் கேரியரில் அரை சதமடிக்காமல் தடுமாறி வருகிறார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 10 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த விராட் கோலியும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் 6 ரன்களில் அவுட்டான அவரும் ரோஹித் போலவே 2வது இன்னிங்சிலும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.
இதையும் படிங்க: 147 வருட டெஸ்ட் வரலாற்றில் முதல் வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ
இறுதியில் நிறைவுக்கு வந்த 2வது நாள் முடிவில் இந்தியா 81-3 ரன்கள் குவித்துள்ளது. தற்போது வங்கதேசத்தை விட 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்தியா இப்போட்டியில் வெற்றி வாய்ப்பை 90% பிரகாசப்படுத்தியுள்ளது. இந்திய அணிக்கு களத்தில் சுப்மன் கில் 33*, ரிஷப் பண்ட் 12* ரன்களுடன் உள்ளனர்.