இதுக்கு ரவி சாஸ்திரியே பரவால்ல.. டிராவிட் தலைமையில் சேனாவில் திணறும் இந்தியா.. மோசமான புள்ளிவிவரம் இதோ

Ravi Shastri and Rahul Dravid
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. முன்னதாக விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அணுகுமுறையை மாற்றி ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வரலாற்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்தனர்.

அதிலும் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தலைமையில் ஐசிசி உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்திற்கு வெளியே தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் இந்தியா புதிய உச்சத்தை தொட்டது. குறிப்பாக 2018/19இல் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா மாபெரும் சாதனை படைத்தது.

- Advertisement -

சுமாரான டிராவிட்:
அதை விட 2020/21இல் விராட் கோலி இல்லாமலேயே 36க்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்த பின் ரகானே தலைமையில் கொதித்தெழுந்து 2 – 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி பெறுவதற்கு ரவி சாஸ்திரியின் பங்கு முக்கியமாக இருந்தது. அதே சமயம் 2018இல் இங்கிலாந்து மண்ணில் 4 – 1 என்ற கணக்கிலும் தென்னாப்பிரிக்காவில் 2018இல் 2 – 1 என்ற கணக்கிலும் நியூசிலாந்தில் 2020இல் 2 – 0 என்ற கணக்கிலும் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த போது இந்தியா தோற்றது.

இருப்பினும் அந்தத் தொடர்களில் எப்போதுமே இந்தியா போராடுவதற்கு தவறியதில்லை. சொல்லப்போனால் அந்த தொடர்களில் இந்தியா வெற்றியை மிகவும் நெருங்கியே தோல்விகளை சந்தித்தது. ஆனால் அவருக்குப் பின் பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் தலைமையில் 2021 டிசம்பரில் இதே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இதே சென்சூரியின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கடைசியாக இந்தியா வெற்றி கண்டது.

- Advertisement -

அந்த போட்டியிலும் கேப்டன் விராட் கோலி ஆவார். அதைத்தொடர்ந்து அத்தொடரில் நடைபெற்ற கடைசி 2 போட்டிகளில் தோற்ற இந்தியா 2022 ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக ரத்து செய்யப்பட்ட 5வது போட்டியில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதன் பின் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மற்றுமொரு படு தோல்வியை ஆஸ்திரேலியாவிடம் சந்தித்த இந்தியா தற்போது இப்போட்டியிலும் போராடாமல் வீழ்ந்துள்ளது.

இதையும் படிங்க: எங்களுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு அர்த்தமில்ல.. அந்த 2 சம்பவங்களை மறந்துடாதீங்க.. கேப்டன் ரோஹித் பதிலடி

அந்த வகையில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் சேனா வெளிநாடுகளில் இந்தியா விளையாடிய 6 போட்டிகளில் 5 தோல்விகளை பதிவு செய்துள்ளது. இதைப் பார்க்கும் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை ரவி சாஸ்திரி எவ்வளவோ பரவாயில்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Advertisement