WTC Final : முழு மூச்சுடன் போராடிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் – திணறும் இந்தியா ஃபாலோ ஆனை தவிர்க்க செய்ய வேண்டியது என்ன?

- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருக்கும் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதி துவங்கிய 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. குறிப்பாக மேகமூட்டத்துடன் கூடிய வானிலை அந்த முடிவை எடுப்பதாக தெரிவித்த ரோகித் சர்மா உலகின் நம்பர் ஒன் பவுலர் அஸ்வினை கழற்றி விட்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா டக் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் வார்னர் 43 ரன்களும் மார்னஸ் லபுஸ்ஷேன் 26 ரன்களும் எடுத்தனர்.

அவர்களை விட 3வது விக்கெட்டுக்கு 285 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கிய டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுத்து தொல்லை கொடுத்தனர். இருப்பினும் அவர்களை அவுட்டாக்கி அடுத்து வந்த கேமரூன் கிரீன் 6, அலெக்ஸ் கேரி 48 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை குறைந்த ரன்களில் அவுட்டாக்கிய இந்திய பவுலர்கள் மேற்கொண்டு போராடி டெயில் எண்டர்களையும் சொற்ப ரன்களில் காலி செய்தனர். அதனால் 600 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா 469 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும் ஷமி மற்றும் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

- Advertisement -

போராடும் இந்தியா:
அதை தொடர்ந்து பேட்டிங்க்கு சாதகமான அதே பிட்ச்சில் இந்தியா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே 15 ரன்களில் அவுட்டாக உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் பந்தை அடிக்காமலேயே 13 ரன்களில் கிளீன் போல்ட்டானார். அடுத்து வந்த புஜாராவும் கவுண்டி தொடரின் சிறப்பாக செயல்பட்டதால் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 ரன்களில் அதே போல் கிளீன் போல்ட்டாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அதனால் 71/4 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியாவை அடுத்ததாக ரகானே – ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஜோடி சேர்ந்து மீட்டெடுக்க போராடினர். அதில் ஆரம்பத்திலேயே அவுட்டாகியும் பட் கமின்ஸ் நோபால் வீசியதால் தப்பித்த ரகானே நங்கூரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் ரவீந்திர ஜடேஜா சற்று அழுத்தத்தை உடைக்கும் வகையில் அதிரடியாக பேட்டிங் செய்தார். அந்த வகையில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர்கள் இந்த மாபெரும் போட்டியில் ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியாவை காப்பாற்ற போராடினார்கள்.

- Advertisement -

இருப்பினும் 5வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி இந்திய ரசிகர்களுக்கு ஓரளவு நம்பிக்கை கொடுத்த போது ரவீந்திர ஜடேஜா 7 பவுண்டரி 1 சிக்ருடன் 48 (51) ரன்களில் நேதன் லைன் சுழலில் சிக்கினார். அதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்த 2வது நாள் ஆட்ட நேரம் முடிவில் 151/5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள இந்தியா ஆஸ்திரேலியாவை விட இன்னும் 318 ரன்கள் பின்தங்கியுள்ளது. களத்தில் ரகானே 29*, பரத் 5* ரன்களுடன் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் பந்து வீசிய அனைவருமே தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.

தற்போதைய நிலைமையில் இன்னும் 119 ரன்கள் எடுத்தால் மட்டுமே குறைந்தபட்சம் ஃபாலோ ஆனை தவிர்க்க முடியும் என்ற பரிதாபமான நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேளை நாளை அந்த ரன்களை எடுக்க தவறினால் மீண்டும் ஆஸ்திரேலியா சொல்வதைக் கேட்டு வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படும் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திப்பதற்கு அதிகமான வாய்ப்பு ஏற்படும் என்பது இந்திய ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:வீடியோ : அடிக்காமலேயே க்ளீன் போல்ட்டான கில், புஜாரா – மீண்டும் ஏமாற்றிய ரோஹித் சர்மா, கோலி – மொத்தமாக சரிந்த இந்தியா

ஆனால் களத்தில் இருக்கும் 2 பேட்ஸ்மேன்களை தவிர மேற்கொண்டு முழுமையான முழு நேர பேட்ஸ்மேன்கள் இல்லாதது இன்னும் ஒரு விக்கெட் விழுந்தால் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்த தயாராக இருக்கிறது. மேலும் லீக் சுற்றில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய இந்தியா கோப்பையை வெல்ல போராடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படி ஃபைனலில் ஃபாலோ ஆனை தவிர்க்க போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய ரசிகர்களை கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Advertisement