அடிக்காமலேயே க்ளீன் போல்ட்டான கில், புஜாரா – மீண்டும் ஏமாற்றிய ரோஹித் சர்மா, கோலி – மொத்தமாக சரிந்த இந்தியா

Indian Batters
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதி துவங்கிய 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவியதால் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததுடன் தர வரிசையில் உலகில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை கழற்றி விட்டது இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த நிலைமையில் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

ஆனால் டேவிட் வார்னர் 43 உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 26 என முக்கிய வீரர்கள் நல்ல ரன்களை எடுத்த அந்த அணிக்கு 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து ஒரு நாள் முழுவதும் இந்திய பவுலர்களை விழி பிதுங்கும் அளவுக்கு 285 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அடித்து நொறுக்கிய டிராவிஸ் ஹெட் மாபெரும் ஃபைனலில் சதமடித்து முதல் வீரராக சாதனை படைத்து 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்து 121 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

சரிந்த இந்தியா:
இருப்பினும் அதை பயன்படுத்திய இந்தியா அடுத்ததாக கேமரூன் கிரீன் 6, அலெக்ஸ் கேரி 48 என முக்கிய பேட்ஸ்மேன்களை பெரிய ரன்களை எடுக்க விடாமல் அவுட்டாக்கி ஒரு கட்டத்தில் 600 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தினர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்களும் ஷமி, தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா பேட்டிங்க்கு சாதகமான அதே பிட்ச்சில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் ரோகித் சர்மா 2 பவுண்டரிகளை பறக்க விட்டதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

ஆனால் கேப்டன் பட் கமின்ஸ் வீசிய 6வது ஓவரின் கடைசி பந்தில் 15 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டான அவர் மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். குறிப்பாக சமீப காலங்களாகவே சுமாராக செயல்பட்டு ஐசிசி தொடர்களிலும் முக்கிய போட்டிகளில் சொதப்பும் அவர் சமீபத்திய ஐபிஎல் தொடரிலும் மோசமாக செயல்பட்ட நிலையில் இப்போட்டியிலும் சொற்ப ரன்களில் அவுட்டானது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

சரி அவர் தான் அப்படி என்று பார்த்தால் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் 2 பவுண்டரிகளை பறக்க விட்டும் ஸ்காட் போலாண்ட் வீசிய 7வது ஓவரில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப்க்கு வெளியே வந்த பந்தை அடிக்காமல் விடலாம் என்று பேட்டை மேலே உயர்த்தினார். ஆனால் பந்தை முழுமையாக ஸ்விங் செய்த போலண்ட் தப்பு பண்ணிட்டீங்களே கில் என்று வருந்தும் அளவுக்கு கிளீன் போல்ட்டாக்கினார்.

அதனால் 3 வகையான கிரிக்கெட்டிலும் சமீபத்தில் சதமடித்து ஐபிஎல் தொடரிலும் ஆரஞ்சு தொப்பியை வென்று உச்சகட்ட ஃபார்மில் இருந்தும் எப்படி அவுட்டானோம் என்று அதிர்ந்த கில் ஏமாற்றத்துடன் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன் காரணமாக 30/2 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக விராட் கோலியுடன் நங்கூரத்தை போட வந்த புஜாராவும் அதே போல் 2 பவுண்டரியுடன் நல்ல துவக்கத்தை பெற்றார்.

- Advertisement -

குறிப்பாக இதே இங்கிலாந்து மண்ணில் கவுண்டி தொடரில் சதங்கள் மேல் சதங்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இந்தியாவை காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட நிலையில் மீண்டும் கேமரூன் கிரீன் வீசிய 15வது ஓவரில் அதே போல அடிக்காமல் லைனை தவறாக கணித்து 14 ரன்களில் கிளீன் போல்ட்டாகி சென்றார்.

இதையும் படிங்க: வீடியோ : அடிக்காமலேயே க்ளீன் போல்ட்டான கில், புஜாரா – மீண்டும் ஏமாற்றிய ரோஹித் சர்மா, கோலி – மொத்தமாக சரிந்த இந்தியா

அதனால் சோகமடைந்த ரசிகர்களுக்கு மறுபுறம் காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் அடுத்த சில ஓவர்களில் மிட்சேல் ஸ்டார்க் வேகத்தில் கேட்ச் கொடுத்து 14 ரன்களில் அவுட்டானார். அதனால் 71/4 என ஆரம்பத்திலேயே சரிந்துள்ள இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 90% பறி போய்விட்டதாக ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement