கடைசி ஓவரில் மட்டும் 36 ரன்ஸ்.. ரோஹித் – ரிங்கு சரவெடியால் இந்தியா 2 தனித்துவமான உலக சாதனை

Rohit Rinku
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நிறைவு பெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக ஜனவரி 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற போட்டி ரசிகர்களுக்கு உச்சகட்ட விருந்து படைத்தது என்று சொல்லலாம். ஏனெனில் அதில் முதலாவது பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோகித் சர்மா 129*, ரிங்கு சிங் 69* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 212 ரன்கள் எடுத்தது.

அதை சேசிங் செய்த ஆப்கானிஸ்தானும் ரஹ்மனுல்லா குர்பாஸ் 50, இப்ராஹிம் ஜாட்ரான் 40, குல்பதின் நைப் 55* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 212 ரன்கள் எடுத்தது. அதனால் சமனில் முடிந்த போட்டியின் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால் மீண்டும் சூப்பர் ஓவர் நடைபெற்றது.

- Advertisement -

இந்தியாவின் உலக சாதனை:
அதில் ரோகித் சர்மா அதிரடியாக ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா நிர்ணயித்த 12 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் ரவி பிஸ்னோய்க்கு எதிராக 2 விக்கெட்களை இழந்தது. அதனால் கடுமையாக போராடியும் இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக ஒரு டி20 போட்டியில் வெல்லும் வாய்ப்பை ஆப்கானிஸ்தான் நழுவ விட்டு தோல்வியை சந்தித்தது.

முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால், விராட் கோலி, சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் ஏமாற்றத்தை கொடுத்ததால் 22/4 என்ற மோசமான துவக்கத்தை பெற்று திண்டாடியது. அப்போது 100 ரன்கள் கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக அதிரடியாகவும் விளையாடி 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்தினார்கள்.

- Advertisement -

குறிப்பாக கரீம் ஜானத் வீசிய கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளில் ரோகித் சர்மா 4, 6 நோ-பால், 6, 1 ரன்கள் எடுத்தார். அடுத்த 3 பந்துகளில் ரிங்கு சிங் 6, 6, 6 என ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். அந்த வகையில் கடைசி ஓவரில் மொத்தமாக 36 ரன்கள் அடித்த இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் 20வது ஓவரில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற உலக சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. இந்தியா : 36, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2024*
2. இந்தியா : 30, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2023
3. ஸ்காட்லாந்து : 30, ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2021

இதையும் படிங்க: மோர்கன், கப்டில், மேக்ஸ்வேலை முந்திய ஹிட்மேன் ரோஹித்.. டி20 கிரிக்கெட்டில் 3 புதிய உலக சாதனை

அத்துடன் ஒரு சர்வதேச டி20 போட்டியில் கடைசி 1, 2, 3, 4, 5, 6 ஓவர்களில் அதிக ரன்கள் (36, 58, 68, 81, 103, 108) அடித்த அணி என்ற உலக சாதனையும் இந்தியா படைத்தது. அதை விட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகள் இழந்தும் கடைசியில் 200 ரன்கள் அடித்த முதல் அணி என்ற தனித்துவ உலக சாதனையும் இந்தியா படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. இந்தியா : 22/4 முதல் 212/4, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2024*
2. அமெரிக்கா : 16/4 முதல் 188/6, அயர்லாந்துக்கு எதிராக, 2021

Advertisement