
இலங்கை, இந்தியா, தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோதின. இலங்கையில் நடைபெற்ற அந்தத் தொடரில் இந்திய அணி தங்களுடைய லீக் சுற்றில் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பற்றி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதைத்தொடர்ந்து மே 11ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி இரண்டாவது இடத்தைப் பிடித்த இலங்கையை எதிர்கொண்டது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருத்தி மந்தனா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்து 70 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த பிரதிகா ராவல் 30 ரன்னில் அவுட்டானார்.
மறுபுறம் தொடர்ந்து அசத்திய மந்தனா அரை சதத்தை அடித்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த ஹர்லின் தியோல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மந்தனா 15 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதத்தை அடித்து 116 (101) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்த 2 சிக்ஸரையும் சேர்த்து அவர் மொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 54 சிக்சர்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் தற்போதைய கேப்டன் ஹர்மன்பிரீத் 53 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனை.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் அரை சதத்தை நெருங்கிய ஹர்லின் 47 ரன்னில் அவுட்டானார். மிடில் ஆடரில் மிரட்டலாக பேட்டிங் செய்த ஜெமிமா 44 (29) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் ரிச்சா கோஸ் 8, அமஞ்ஜோத் கவுர் 18, தீப்தி சர்மா 20* ரன்கள் எடுத்தார்கள். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்தியா 342-7 ரன்கள் குவித்து அசத்தியது.
இதையும் படிங்க: இப்போ வேணாம்.. இந்திய கவசத்தின் வீரன் விராட் கோலி அதுக்கு அப்றம் ரிட்டையராகட்டும்.. சித்து அட்வைஸ்
இலங்கை அணிக்கு அதிகபட்சமாக மல்கி மதரா 2, தேவ்மி விகாங்கா 2, சுகந்திகா குமாரி 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். இதைத் தொடர்ந்து 343 என்ற கடினமான இலக்கை இலங்கை துரத்தி வருகிறது. அதைக் கட்டுப்படுத்தி கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி பவுலிங் செய்து வருகிறது.