இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் ஓய்வு பெறும் முடிவை பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதை மறுபரிசீலனை செய்யுமாறு விராட் கோலிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் பேட்டிங் துறையில் கேஎல் ராகுல் தவிர்த்து அனுபவமிக்க வீரர்கள் யாருமில்லை. எனவே விராட் கோலியும் ஓய்வு பெற்று விட்டால் இங்கிலாந்தில் ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் அனுபவமின்மையால் தடுமாறுவார்கள் என்று பிசிசிஐ கருதுகிறது. அதனால் இந்தியாவுக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என்று விராட் கோலியிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஓய்வு பெறுங்க:
இந்நிலையில் விராட் கோலி ஓய்வு பெறுவது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்று முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார். இருப்பினும் ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் விராட் கோலி மட்டுமே இங்கிலாந்து மண்ணில் இந்திய பேட்டிங் துறையின் கவசமாக இருக்கும் அனுபவத்தை கொண்டுள்ளதாக சித்து கூறியுள்ளார். அப்படிப்பட்ட நேரத்தில் விராட் கோலி ஓய்வு பெறக்கூடாது என்று சித்து கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற விரும்புகிறார். இந்த செய்தி கிரிக்கெட் உலகில் கிளறலை உண்டாக்கியுள்ளது. பொதுவாக பழைய விஷயங்கள் கண்டிப்பாக மாற வேண்டும் அப்போது தான் புதிய விஷயங்கள் மகசூல் கொடுக்கும் என்று சொல்வார்கள். அந்த நோக்கத்தை விராட் கோலி சரியாக பின்பற்றுகிறார்”
இப்போ வேண்டாம்:
“ஆனால் அவர் ஓய்வு பெற விரும்பும் நேரம் சரியற்றதாக இருக்கிறது. ஏனெனில் இந்தியாவின் பெருமை மற்றும் கௌரவம் தற்போது கோட்டின் எல்லையில் இருக்கிறது. தற்போது நாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு மிகவும் கடினமான ஒரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்கிறோம். இங்கிலாந்தில் விராட் கோலி இந்திய அணியின் ஒளிரும் கவசத்தின் வீரனாக இருக்க முடியும் என்று சொல்கிறேன்”
இதையும் படிங்க: ராகுல் டிராவிட் கையால் எனக்கு கிடைத்த அந்த அங்கீகாரத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது – ரோஹித் சர்மா பகிர்வு
“அவரிடம் அனுபவம் இருக்கிறது. குறிப்பாக ரோஹித் சர்மா விடை பெற்றுள்ள இந்த சமயத்தில் நீங்கள் அனுபவமற்ற அணியை இங்கிலாந்துக்கு அனுப்ப முடியாது” என்று கூறினார். முன்னதாக 2007க்குப்பின் இங்கிலாந்து மண்ணில் இந்தியா ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. எனவே இம்முறை அங்கே இந்தியா வெல்வதற்கு விராட் கோலியின் அனுபவம் அவசியமாகிறது என்றால் மிகையாகாது.



