IND vs WI : மீண்டும் புதிய உலகசாதனையுடன் டி20 உ.கோ வெல்ல சிங்கநடை போடும் இந்தியா – முழுவிவரம் இதோ

ROhit Sharma IND vs WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டியின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த நிலையில் முக்கியமான 4-வது போட்டி ஆகஸ்ட் 6-ஆம் தேதியான நேற்று அமெரிக்காவின் ப்ளோரிடாவில் நடைபெற்றது. மோசமான வானிலை காரணமாக இந்திய நேரப்படி இரவு 8.45 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 4.4 ஓவரில் அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்டு 53 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டலான தொடக்கம் கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் கேப்டன் ரோகித் சர்மா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 33 (16) ரன்களில் அவுட்டானார்.

Rishabh Pant 44

- Advertisement -

அடுத்த ஓவரிலேயே சூர்யகுமார் யாதவ் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 24 (14) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அதிரடியை குறைக்காமல் அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா தனது பங்கிற்கு 2 பவுண்டரியுடன் 21 (19) ரன்களும் 6 பவுண்டரிகளை பறக்கவிட்ட ரிஷப் பண்ட் 44 (31) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அந்த சமயத்தில் களமிறங்கிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் 6 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாத சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 30* (23) ரன்களும் கடைசியில் அக்சர் படேல் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 20* (8) ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார்.

மிரட்டிய இந்தியா:
அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 191/5 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் மற்றும் ஓபேத் மெக்காய் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து இத்தொடரை கைப்பற்ற வென்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் 192 ரன்களை சேசிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீசுக்கு தொடக்க வீரர் பிரண்டன் கிங் 13 (8) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய தேவோன் தாமஸ் 1 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். அதனால் 22/2 என மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்தடுத்த 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட கேப்டன் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 24 (8) ரன்கள் எடுத்தாலும் பொறுப்பின்றி ரன் அவுட்டானார்.

Thomas

அந்த நிலைமையில் மற்றொரு தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 14 (16), ரோவ்மன் போவல் 24 (16), ஜேசன் ஹோல்டர் 13 (9), சிம்ரோன் ஹெட்மையர் 19 (19) என முக்கிய வீரர்கள் வீரர்கள் அனைவரும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்ததால் 19.1 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகளையும் ஆவேஷ் கான், அக்சர் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

- Advertisement -

புதிய உலகசாதனை:
அதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 3 – 1* (5) என்ற கணக்கில் முன்கூட்டியே தொடரை கைப்பற்றி மீண்டும் அசத்தியுள்ளது. இந்த வெற்றியுடன் வரலாற்றில் இதுவரை வெஸ்ட் இண்டீசை 24 டி20 போட்டிகளில் எதிர்கொண்ட இந்தியா அதில் 16 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை உடைத்த இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பாகிஸ்தான் அதிகபட்சமாக 15 வெற்றிகளை பதிவு செய்துள்ளதே முந்தைய சாதனையாகும்.

Arshdeep Singh IND vs WI

மேலும் இந்த 2022-ஆம் ஆண்டு 199/2, 211/4, 225/7, 198/8, 198/9, 190/6, 191/5* என 7 போட்டிகளில் 190க்கும் மேற்பட்ட ரன்களை இந்தியா குவித்துள்ளது. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிகமுறை 190க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த அணி என்ற புதிய உலக சாதனையையும் இந்தியா படைத்தது. இது புதிய கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் அதிரடி பாதையில் இந்தியா பயணிக்கத் தொடங்கியுள்ளதை காட்டுகிறது.

- Advertisement -

இந்தியாவின் சிங்கநடை:
அதைவிட கடந்த 2021 டி20 உலகக் கோப்பைக்கு பின் இதுவரை நியூசிலாந்து (3 – 0), வெஸ்ட் இண்டீஸ் (3 – 0), இலங்கை (3 – 0), தென் ஆப்பிரிக்கா (2 – 2), அயர்லாந்து (2 – 0), இங்கிலாந்து (2 – 1), வெஸ்ட் இண்டீஸ் (3 – 1*) என சொந்த மண்ணிலும் வெளிநாட்டு மண்ணிலும் பங்கேற்ற அனைத்து தொடர்களிலும் இந்தியா தோல்வியே அடையாமல் வெற்றிநடை போட்டு வருகிறது.

இதையும் படிங்க : IND vs WI : ஷாஹித் அப்ரிடியை முந்தி ஆசிய கிங்காக ஹிட்மேன் ரோஹித் படைத்த 5 சாதனைகள் இதோ

மேலும் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் 2019 முதல் இதுவரை பங்கேற்ற 9 டி20 தொடர்களில் இந்தியா தோல்வியே அடையாமல் வெற்றிநடை போட்டு வருகிறது. மேலும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மா தலைமையில் 18 தொடர்களில் களமிறங்கிய 17 தொடர்களை வென்றுள்ளது. இப்படி தொடர் வெற்றிகளால் சிங்கத்தை போல வெற்றி நடை போட்டு வரும் இந்தியா வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை வெல்ல இப்போதே தயாராகியுள்ளது.

Advertisement