நியூஸிலாந்துக்கு எதிராக 12 வருட சாதனையை தகர்த்த இந்தியா – சொந்த மண்ணில் கில்லியாக புதிய வரலாற்று சாதனை

Shubman Gill Ishan Kishan
- Advertisement -

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா அடுத்ததாக ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதில் முதல் போட்டியில் கடுமையாக போராடி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஜனவரி 21ஆம் தேதியன்று நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற அப்போட்டியில் பவுலிங்க்கு சாதகமாக இருந்த மைதானத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து முதல் ஓவரிலிருந்தே இந்தியாவின் தரமான பந்து வீச்சிற்கு பதில் சொல்ல முடியாமல் ஃபின் ஆலன் 0, டேவோன் கான்வே 7, ஹென்றி நிக்கோலஸ் 2, டார்ல் மிட்சேல் 1, கேப்டன் டாம் லாதம் 1 என முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை ஒற்றை இலக்க ரன்களில் இழந்தது. அதனால் 15/5 என்ற படுமோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணி 50 ரன்களை தாண்டுமா என அந்நாட்டு ரசிகர்கள் கவலையடைந்த போது நல்ல வேலையாக முதல் போட்டியின் நாயகன் மைக்கேல் பிரேஸ்வெல் 22, கிளன் பிலிப்ஸ் 36, மிட்சேல் சாட்னர் 27 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்பட்டு கணிசமான ரன்களை சேர்த்தனர்.

சூப்பர் சாதனை:
இருப்பினும் 34.3 ஓவரிலேயே 108 ரன்களுக்கு அந்த அணியை சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 109 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு 72 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா 51 (50) ரன்கள் எடுத்து அவுட்டானாலும் சுப்மன் கில் 40* (53) ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார். அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Rohit sharma IND vs NZ

முன்னதாக இப்போட்டியில் 20.1 ஓவரிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக துரத்திய இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக பந்துகள் அடிப்படையில் பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2010ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டியில் 173 பந்துகள் மீதம் வைத்து வென்றதே முந்தைய சாதனையாகும். அந்த பட்டியல்:
1. 179 பந்துகள், ராய்ப்பூர், 2023*
2. 173 பந்துகள், சென்னை, 2010
3. 160 பந்துகள், ஆக்லாந்து, 1994

- Advertisement -

அத்துடன் வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் இலங்கையை 3 – 0 (3) என்ற கணக்கில் தோற்கடித்து கோப்பையை வென்ற இந்தியா தற்போது நியூசிலாந்துக்கு எதிராகவும் 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் வெற்றி நடை போடும் இந்தியா இம்முறை உலகின் நம்பர் ஒன் அணியான நியூசிலாந்தை தோற்கடித்து சொந்த மண்ணில் எதிரணி யாராக இருந்தாலும் நாங்கள் தான் கில்லி என்பதை நிரூபித்துள்ளது.

Siraj 1

அதற்கு மேலும் ஒரு சான்றாக சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக 7 தொடர்ச்சியான தொடர்களை வென்று இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு தொடரில் தோற்ற இந்தியா அதன்பின் இத்தொடரையும் சேர்த்து தொடர்ந்து 7 தொடர்களில் வென்றுள்ளது. இதற்கு முன் 6 தொடர்ச்சியான தொடர்களில் வென்றதே முந்தைய சாதனையாகும். அந்த பட்டியல்:
1. 7* (2019 முதல் தற்போது வரை)
2. 6 (2009 – 2011)
3. 6 (2016 – 2018)
4. 5 (2013 – 2014)

இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் புறக்கணிக்கப் பட்ட பின் இந்தியாவை அடித்து நொறுக்கிய 5 வெளிநாட்டு வீரர்கள் – லிஸ்ட் இதோ

இதை அடுத்து இத்தொடரின் கடைசி சம்பிரதாயப் போட்டி வரும் ஜனவரி 24ஆம் தேதியன்று இந்தூரில் நடைபெறுகிறது. அதிலும் வெற்றி பெற்று 3 – 0 (3) என்ற கணக்கில் வெற்றி பெற முயற்சிக்க உள்ளது. மறுபுறம் ஏற்கனவே தொடரை இழந்த நியூசிலாந்து குறைந்தபட்சம் ஆறுதல் வெற்றி பெற போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement