ஐபிஎல் தொடரில் புறக்கணிக்கப் பட்ட பின் இந்தியாவை அடித்து நொறுக்கிய 5 வெளிநாட்டு வீரர்கள் – லிஸ்ட் இதோ

Advertisement

இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் தரமான இளம் வீரர்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடர் கடந்த 15 வருடங்களாக இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பல தரமான வீரர்கள் உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. கூடவே போனஸாக எதிர்பாராத கோடிகள் சம்பளமாக கிடைப்பதால் இப்போதெல்லாம் நாட்டுக்கு விளையாடுவதற்கு நிகராக ஐபிஎல் தொடரிலும் விளையாட அனைத்து வீரர்களும் முன்னுரிமை கொடுக்கின்றனர். ஏனெனில் இதில் விளையாடும் போது உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் இணைந்து விளையாடும் கிடைக்கும் வாய்ப்பு ஒவ்வொரு வீரரும் தங்களது கேரியரில் வளர்வதற்கு மிகப்பெரிய உதவி செய்கிறது.

இருப்பினும் அதிக போட்டி மிகுந்த ஐபிஎல் தொடரில் நிறைய தரமான வீரர்கள் ஏலத்தில் விலை போகாத நிலைமை நிகழ்வதும் வழக்கமாகும். ஆனால் பூனை கண் மூடினால் உலகம் இருண்டு விடாது என்ற பழமொழிக்கேற்ப ஐபிஎல் தொடரில் விளையாடாத நிறைய வீரர்கள் வேறு ஏதோ ஒரு இடத்தில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வளர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

- Advertisement -

அதிலும் சமீப காலங்களில் ஐபிஎல் தொடரில் புறக்கணிக்கப்பட்ட சில வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியை அடித்து நொறுக்கி “இவர்களை தவிர விட்டு விட்டோமே” என்று ஐபிஎல் அணி நிர்வாகிகள் வருந்தும் அளவுக்கு அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்களைப் பற்றி பார்ப்போம்:

5. வேன் பர்ணல்: தென்னாபிரிக்காவை சேர்ந்த ஆல் ரவுண்டரான இவரை 2015க்குப்பின் எந்த அணியும் ஐபிஎல் தொடரில் வாங்கவில்லை. இருப்பினும் உலகின் இதர டி20 தொடர்களில் அசத்தும் இவர் 2022 டி20 உலக கோப்பையில் சூரியகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய 3 வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து அந்தத் தொடரில் இந்தியா சந்தித்த ஒரே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து ஆட்டநாயகன் விருது வென்றார். ஆனால் அதைப் பார்த்த பின்பும் கூட சமீபத்திய ஏலத்தில் அவர் எந்த அணியும் வாங்கவில்லை.

- Advertisement -

4. டாம் லாதம்: நியூசிலாந்தின் துணை கேப்டனாக டாப் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேனாக அசத்தி வரும் இவர் கடந்த நவம்பர் மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பெரிய இலக்கை துரத்தும் போது அசால்டாக 145* (104) ரன்கள் விளாசி தோல்வியை பரிசளித்தார்.

அத்தொடரின் இதர போட்டிகள் மழையால் கைவிடப்பட்ட நிலையில் 1 – 0 (3) என்ற கணக்கில் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவரை 2023 ஏலம் உட்பட சமீபத்திய ஐபிஎல் ஏலங்களில் எந்த அணியும் வாங்கவில்லை.

- Advertisement -

3. மெஹதி ஹசன்: கடந்த டிசம்பர் மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா கையில் வைத்திருந்த வெற்றியை கடைசி நேரத்தில் களமிறங்கி ராகுல் கோட்டை விட்ட கேட்ச் உதவியுடன் 38* (39) ரன்கள் விளாசி தட்டிப் பறித்த இவர் 2வது போட்டியிலும் சதமடித்து இந்தியாவை தோற்கடித்தார்.

Mehidy Hasan

அந்த வகையில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடிக்க முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதை வென்ற அவர் அடுத்ததாக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் கடைசி போட்டியில் மிகப்பெரிய பயத்தை காட்டினார். ஆனால் இவரையும் எந்த ஐபிஎல் அணியும் வாங்கவில்லை.

- Advertisement -

2. தசுன் சனாக்கா: யாருமே எதிர்பாரா வகையில் 2022 ஆசிய கோப்பைஉய் இலங்கைக்கு வென்று கொடுத்த கேப்டனான இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பெரும்பாலான போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு மிகப்பெரிய சவால் கொடுத்ததை இந்திய ரசிகர்கள் மறக்க முடியாது.

Asia Cup Dhasun Shanaka Sri Lanka

குறிப்பாக 2022 ஆசிய கோப்பையில் 33* (18) ரன்கள் விளாசி இந்தியாவை அந்த தொடரிலிருந்து வெளியேற்றிய அவரை தாம் ஆலோசகராக இருக்கும் லக்னோ அணி உட்பட இதர ஐபிஎல் அணிகளும் தவற விட்டு விட்டதாக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பாராட்டியிருந்தார்.

1. மைக்கேல் பிரேஸ்வெல்: கடந்த ஜனவரி 18ஆம் தேதியன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சுப்மன் கில் இரட்டை சதத்தின் (208) உதவியுடன் இந்தியா நிர்ணயித்த 350 ரன்களை துரத்திய நியூசிலாந்து 131/6 என சரிந்தது.

Bracewell

இதையும் படிங்க: IND vs NZ : என்னுடைய சிறப்பான பந்துவீச்சுக்கு காரணம் இதுதான். வேற எதுவுமில்ல – ஆட்டநாயகன் ஷமி பேட்டி

ஆனால் 7வது இடத்தில் களமிறங்கி வெறித்தனமாக பேட்டிங் செய்த அவர் 127* (82) ரன்களை விளாசி இந்தியாவுக்கு பயத்தை காட்டி வெற்றிக்கு போராடி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் இவர் எந்த ஐபிஎல் அணிக்கு விளையாடுகிறார் என்று தேடியே போது ஏலத்தில் 1 கோடி என்ற மிக அடிப்படை விலையில் கூட எந்த அணியும் வாங்கவில்லை என்பதை அறிந்து ஏமாற்றமடைகிறார்கள்.

Advertisement