IND vs ENG : 39 வருடங்களுக்கு பின் வரலாற்று சாதனை வெற்றி – அசாருதீன், தோனி வரிசையில் சாதித்து காட்டிய ரோஹித் சர்மா

IND vs ENG TEam INDIA
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. ஆனால் லார்ட்ஸில் நடந்த 2-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது. அதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது போட்டி ஜூலை 17-ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து மீண்டும் துல்லியமான இந்திய பவுலர்களின் பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 45.4 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இப்போட்டியில் காயத்தால் விலகிய ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதில் விளையாடிய முகம்மது சிராஜ் தனது முதல் ஓவரிலேயே ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோரை அடுத்தடுத்து டக் அவுட் செய்து அசத்தினார். அந்த நிலைமையில் மறுபுறம் அதிரடி காட்டிக் கொண்டிருந்த ஜேசன் ராயை 41 (31) ரன்களில் அவுட்டாக்கிய ஹர்திக் பாண்டியா அடுத்து வந்த பென் ஸ்டோக்சை 27 (29) ரன்களில் காலி செய்து இந்தியாவின் கையை ஓங்க வைத்தார். அதனால் 74/4 என தடுமாறிய இங்கிலாந்து 5-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஜோஸ் பட்லருடன் 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய மொயீன் அலி 34 (44) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த லியம் லிவிங்ஸ்டன் 27 (31) ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

போராடிய பண்ட் – பாண்டியா:
அந்த நிலைமையில் தனது அணியை காப்பாற்ற முடிந்தளவு போராடிய கேப்டன் பட்லர் 60 (80) ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் டேவிட் வில்லி 18 (15) ரன்களும் கிரேக் ஓவெர்ட்டன் 32 (33) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். இந்தியா சார்பில் பந்துவீச்சில் கலக்கிய ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளும் சஹால் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

அதனால் 260 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஷிகர் தவான் 1 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்ற அவரின் பின்னாடியே ரோகித் சர்மாவும் 17 (17) ரன்களில் நடையை கட்டினார். அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி வழக்கம்போல 17 (22) ரன்களில் அவுட்டாகி கைவிட்ட நிலையில் காப்பாற்றுவார் என கருதப்பட்ட சூரியகுமார் யாதவும் 16 (28) ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

அதனால் 72/4 என தத்தளித்த இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கிய போது ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் – ஹர்டிக் பாண்டியா ஆகியோர் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் சுமார் 18 ஓவர்கள் நங்கூரத்தை போட்டு 133 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினார்கள். அதில் கடைசி நேரத்தில் 10 பவுண்டரியுடன் 71 (55) ரன்களில் ஹர்திக் பாண்டியா அவுட்டானாலும் மறுபுறம் சிம்ம சொப்பனமாக மாறிய ரிஷப் பண்ட் கடைசி வரை அவுட்டாகாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசி 16 பவுண்டரி 2 சிக்சருடன் 125* (113) ரன்கள் குவித்து வெற்றிபெற வைத்தார்.

இந்தியாவின் மாஸ்:
குறிப்பாக கடைசியில் 25 ரன்கள் தேவைப்பட்ட போது 4, 4, 4, 4, 4, 1, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்கவிட்ட அவர் 42.1 ஓவரில் 261/5 ரன்களை எடுக்க வைத்து இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார். இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருதையும் இந்த தொடர் முழுவதும் ஆல்-ரவுண்டராக அசத்திய ஹர்டிக் பாண்டியா தொடர்நாயகன் விருதையும் வென்று அசத்தினார்கள்.

- Advertisement -

முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் 378 ரன்களை அசால்டாக சேசிங் செய்து வரலாற்று தோல்வியை பரிசளித்து 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்த இங்கிலாந்துக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் நடந்த டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் வென்று தக்க பதிலடி கொடுத்தது. தற்போது ஒருநாள் தொடரையும் 2 – 1 (3) என்ற கணக்கில் வென்றுள்ள இந்தியா வலுவான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து இந்த சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் முடித்துள்ளது.

39 வருடங்கள்:
மேலும் இந்த வெற்றியால் 8 வருடங்களுக்கு பின் இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்று இந்தியா அசத்தியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக கடந்த 1990இல் முகமது அசாருதீன் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் வென்ற இந்தியா அதன்பின் 24 வருடங்கள் கழித்து கடந்த 2014இல் எம்எஸ் தோனி தலைமையில் 3 – 1 (5) என்ற கணக்கில் வென்றிருந்தது.

- Advertisement -

அவர்களது வரிசையில் தற்போது இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்ற 3-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். அதைவிட இப்போட்டி நடைபெற்ற மான்செஸ்டர் மைதானத்தில் 39 வருடங்களுக்குப்பின் இங்கிலாந்தை தோற்கடித்தது இந்தியா வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க : IND vs ENG : விமர்சனங்களுக்கு ஸ்டைலாக முற்றுப்புள்ளி வைத்த ரிஷப் பண்ட் – தோனியை மிஞ்சி படைத்த சாதனைகள் இதோ

இம்மைதானத்தில் முதல் முறையாக கடந்த 1983 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட கபில்தேவ் தலைமையிலான இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பின்னர் பைனலில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து உலக கோப்பையை வென்றது. அதன்பின் 1986, 1996, 2007 ஆகிய வருடங்களில் நடந்த 3 போட்டிகளில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்தியா ஒருவழியாக தற்போது வென்று அசத்தியுள்ளது.

Advertisement