IND vs AUS : வரலாறு காணாத அளவுக்கு ஆஸியை அடித்து நொறுக்கிய இந்திய அணி.. 10 வருட சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனை

IND vs AUS ODi
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு இறுதி கட்டமாக தயாராகும் வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதை தொடர்ந்து இந்தூரில் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ருதுராஜ் ஆரம்பத்திலேயே 8 ரன்களில் ஹேசல்வுட் வேகத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில்லுடன் அடுத்ததாக களமிறங்கி ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். போதாக்குறைக்கு பேட்டிங்க்கு சாதகமாக இருந்த இந்தூர் பிட்ச்சில் சுமாராக பந்து வீசிய ஆஸ்திரேலிய பவுலர்களை வெளுத்து வாங்கிய இந்த ஜோடி வேகமாக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

சாதனை ஸ்கோர்:
நேரம் செல்ல செல்ல மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடியில் காயத்திலிருந்து குணமடைந்து சமீபத்திய ஆசிய கோப்பையில் தடுமாறிய ஸ்ரேயாஸ் ஐயர் இப்போட்டியில் ஃபார்முக்கு திரும்பி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 11 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 105 (90) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அவருடன் 2வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்திய சுப்மன் கில் தம்முடைய திறமையை காட்டி 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் சதமடித்து 104 (97) ரன்கள் குவித்து அவுட்டானார்.

அதை தொடர்ந்து வந்த இசான் கிசான் அதிரடியாக விளையாடும் முனைப்பில் 31 (18) ரன்களில் அவுட்டாகி சென்றாலும் அதற்கும் சேர்த்து அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் வெளுத்து வாங்கினார்கள் என்று சொல்லலாம். குறிப்பாக கேமரூன் கிரீன் வீசிய ஓவரில் மைதானத்துக்கு வெளியே செல்லும் அளவுக்கு கேஎல் ராகுல் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அவரை விட 44வது ஓவரில் வலுவாக சிக்கிய கேமரூன் கிரீனை முதல் 4 பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்ட சூரியக்குமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஃபார்முக்கு வந்து விட்டேன் என்பதை காட்டினார். அந்த வகையில் டெத் ஓவர்களில் வெளுத்து வாங்கிய இந்த ஜோடியில் ராகுல் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 52 (38) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் கடைசி வரை அவுட்டாகாத சூரியகுமார் 6 பவுண்டரி 6 சிக்சரை பறக்க விட்டு 72* (37) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

இதையும் படிங்க: வீடியோ : 6. 6. 6. 6.. கேமரூன் க்ரீன் ஒரே ஓவரில் அடுத்தடுத்த 4 சிக்ஸர்களை தெறிக்க விட்ட சூரியகுமார்.. ஒன்டேவிலும் அமர்க்களம்

இறுதியில் ரவீந்திர ஜடேஜா 13 ரன்கள் எடுத்ததால் 50 ஓவர்களில் இந்தியா 399/5 ரன்கள் எடுத்தது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2013ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் ரோகித் சர்மா 209* ரன்கள் குவித்த உதவியுடன் இந்தியா 383/6 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அப்படி வரலாறு காணாத அளவுக்கு அடி வாங்கிய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement