122க்கு ஆல் அவுட்.. பஸ்பால் இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா.. 147 வருடத்தில் மிகப்பெரிய சரித்திர சாதனை வெற்றி

IND vs ENG 3 Test
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. அதில் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றது. அதனால் சமநிலை பெற்ற இத்தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கியது.
அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 10, கில் 0, ரஜத் படிடார் 5 ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 33/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்திய அணியை மற்றொரு துவக்க வீரர் ரோகித் சர்மா சதமடித்து 132 ரன்களும் ரவீந்திர ஜடேஜா சொந்த ஊரில் 112 ரன்களும் குவித்து காப்பாற்றினர்.

- Advertisement -

மெகா வெற்றி:
மேலும் மிடில் ஆர்டரில் அறிமுகப் போட்டியில் சர்பராஸ் கான் 62, துருவ் ஜூரேல் 46 மற்றும் அஸ்வின் 37, பும்ரா 26 ரன்கள் எடுத்தனர். அதனால் இந்தியா முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு பென் டக்கெட் அதிரடியாக விளையாடி சதமடித்து 153 (151) ரன்கள் குவித்ததால் ஒரு கட்டத்தில் 224/2 என்ற வலுவான நிலையில் இருந்தது.

ஆனால் அதன் பின் சுதாரிப்புடன் செயல்பட்டு அடுத்த 95 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்தை 319 ரன்கள் சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக சிராஜ் 4, ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 430/4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 19, ரஜத் படிடார் 0 ரன்களில் அவுட்டானாலும் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 214*, சுப்மன் கில் 91, சர்பராஸ் கான் 68* ரன்கள் எடுத்தனர். இறுதியில் 557 என்ற மெகா இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு பென் டன்கெட் 4 ரன்களில் ரன் அவுட்டாக ஜாக் கிராவ்லி 11, ஓலி போப் 3, ஜோ ரூட் 7, ஜானி பேர்ஸ்டோ 4, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 15, ரீஹன் அஹ்மத் 0 ரன்களில் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்தனர்.

அதனால் 50/7 என ஆரம்பத்திலேயே மொத்தமாக சரிந்த இங்கிலாந்துக்கு கடைசியில் பென் ஃபோக்ஸ் 16, டாம் ஹார்ட்லி 16, மார்க் வுட் அதிரடியாக 33 ரன்கள் எடுத்து போராடினர். இருப்பினும் அந்த அணியை 122 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5, குல்தீப் யாதவ் 2 விக்கெட்களை சாய்த்தனர். அதனால் 434 ரன்கள் வித்யாசத்தில் வென்ற இந்தியா 2 – 1* (5) என்ற கணக்கில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இத்தொடரில் முன்னிலை பெற்று சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதை காண்பித்துள்ளது.

இதையும் படிங்க: ரோஹித்தின் வாழ்நாள் சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்.. 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரம்மாண்ட உலக சாதனை

அதை விட இதன் வாயிலாக 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 400க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ள இந்தியா ரன்கள் அடிப்படையில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் வரலாற்றில் விளையாடி 577 போட்டிகளில் 2021 டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் நடந்த போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே இந்தியாவின் முந்தைய மிகப்பெரிய வெற்றியாகும்.

Advertisement