
ஜிம்பாப்வே மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஜூலை 6ஆம் தேதி துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஜிம்பாப்வே ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற அடுத்த போட்டியில் இந்தியா வீரர்களின் சுமாரான ஆட்டத்தால் தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
அந்த நிலையில் இத்தொடரின் இரண்டாவது போட்டி ஜூலை ஏழாம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஹராரே தொடங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சென்ற போட்டியில் டக் அவுட்டான அபிஷேக் ஷர்மா இம்முறை சிக்ஸரை பறக்க விட்டு ஆட்டத்தை துவக்கினார்.
புரட்டிய இந்தியா:
ஆனால் எதிர்ப்புறம் தடுமாறிய கேப்டன் கில் 2 (4) ரன்னில் முசர்பானி வேகத்தில் அவுட்டானார். அதனால் அடுத்ததாக வந்த ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாடினார். அவருடன் சேர்ந்து அபிஷேக் ஷர்மாவும் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி கொடுத்த கேட்ச்சை ஜிம்பாப்வே தவற விட்டது. அதைப் பயன்படுத்திய இந்த ஜோடி நங்கூரமாக நின்று விக்கெட்டை விடாமல் பேட்டிங் செய்தது.
அதில் அபிஷேக் ஷர்மா ஒரு கட்டத்திற்கு பின் அதிரடியாக விளையாடத் துவங்கி 33 பந்துகளில் அரை சதமடித்தார். ஆனால் அரை சதம் கடந்த பின் அதிரடியை அதிகப்படுத்திய அவர் கடந்த போட்டிக்கும் சேர்த்து இப்போட்டியில் ஜிம்பாப்வே பவுலர்களை புரட்டி எடுத்தார். குறிப்பாக டியோன் மேயர்ஸ் வீசிய 11வது ஓவரில் 2, 4, 6, 4, 6, 4 என 26 ரன்களை விளாசிய அவர் 82 ரன்களை தொட்டார்.
அப்போது சேவாக் போல ஹாட்ரிக் சிக்சர்களைப் பறக்க விட்ட அபிஷேக் ஷர்மா சதமடித்து அசத்தினார். கடந்த போட்டியில் டக் அவுட்டான அவர் இப்போட்டியில் சதமடித்து அற்புதமான கம்பேக் கொடுத்து 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் 100 (47) ரன்களை 212.77 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டானார். அவர் அவுட்டானதும் மறுபுறம் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த ருதுராஜ் தனது பங்கிற்கு அதிரடியை துவங்கி அரை சதமடித்தார்.
நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்கிய அவரும் 11 பவுண்டரி ஒரு சிக்சருடன் 77* (47) ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து கடைசி நேரத்தில் தம்முடைய பங்கிற்கு ஜிம்பாப்வே பவுலர்களை புரட்டிய ரிங்கு சிங் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 48* (22) ரன்கள் அடித்தார். அதனால் 20 ஓவரில் 234/2 ரன்கள் குவித்த டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்பேவுக்கு எதிராக தங்களுடைய அதிகபட்ச போர் பதிவு செய்து சாதனை படைத்தது.
இதையும் படிங்க: மறுபடியும் தப்பு பண்ண மாட்டேன்.. 2வது போட்டியில் சாய் சுதர்சனை சேர்த்த கில்.. கம்பேக் வீரருக்கு சேர்ந்த பரிதாபம்
இதற்கு முன் கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்பே அணிக்கு எதிராக இந்தியா 186/5 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் கடந்த போட்டியில் 116 ரன்கள் கூட அடிக்காமல் தோற்ற இந்தியா இப்போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்து சாதனையுடன் ஜிம்பாப்வேவுக்கு பதிலடி கொடுத்துள்ளது