IND vs ENG : இந்தியா அந்த இடத்துல தப்பு பண்ணிட்டாங்க, இனி வெற்றி கடினம் தான் – முன்னாள் வீரர் கருத்து

Jasprit Bumrah Team India
- Advertisement -

பர்மிங்காம் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டி இறுதி நாளை எட்டியுள்ளது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் போராடி 416 ரன்கள் சேர்த்தது. கில், புஜாரா, விராட் கோலி உட்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 98/5 என திண்டாடிய இந்தியாவுக்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சதமடித்து 146 ரன்களும் ரவீந்திர ஜடேஜா சதமடித்து 104 ரன்களும் குவித்தனர்.

Rishabh-Pant-and-Ravindra-Jadeja

- Advertisement -

கடைசி நேரத்தில் ஸ்டுவர்ட் ப்ராட் வீசிய ஒரே ஓவரில் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா 35 ரன்களை பறக்கவிட்டு உலக சாதனை படைத்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சில் வெறும் 284 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் உட்பட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

சொதப்பிய இந்தியா:
அதனால் 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 400க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2-வது இன்னிங்சில் சுமாராக பேட்டிங் செய்து 245 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி சொதப்பியது. கில், விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக புஜாரா 66 ரன்களும் ரிஷப் பண்ட் 57 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

Pujara 1

இறுதியில் 378 என்ற துரத்திய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் தொடக்க வீரர்களின் அதிரடியால் 100/0 என்ற வலுவான தொடக்கத்தை பெற்று அச்சுறுத்தியது. அப்போது அலெஸ் லீஸ் 56, ஜாக் கிராவ்லி 46, ஓலி போப் 0 என டாப் ஆர்டரை அடுத்தடுத்து காலி செய்த இந்தியா வெற்றிக்காக போராடியது. ஆனாலும் பின்னர் வந்த ஜோ ரூட் 76* ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 72* ரன்களும் எடுத்து நங்கூரமாக விளையாடி வருவதால் 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 259/3 என்ற வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்துக்கு கடைசி நாளில் வெற்றிக்கு 100 ஓவரில் வெறும் 119 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

- Advertisement -

தப்பு பண்ணிட்டாங்க:
தற்போதைய நிலைமையில் போட்டியை டிராவும் செய்ய முடியாது என்பதால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் 2-வது இன்னிங்சில் சுழல் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவை இந்தியா பயன்படுத்திய விதத்தில் தவறு செய்து விட்டதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரேம் ஸ்வான் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது எல்பிடபிள்யூ செய்ய வேண்டும் என்பதற்காக “ஓவர் தி விக்கெட்” பகுதியிலிருந்து ஜடேஜா பந்து வீசினார் என்று தெரிவிக்கும் அவர் அதற்கு பதில் நேரான ஸ்டம்ப் லைனில் பந்து வீசியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

Swann

“ஓவர் தி விக்கெட் திசையிலிருந்து ஜடேஜா பந்துவீசியதில் இந்தியா ட்ரிக்கை தவற விட்டதாக நான் நினைக்கிறேன். ஜடேஜா ஒரு நல்ல பவுலர், அவர் ஓவர் தி விக்கெட் திசையிலிருந்து பந்துவீச தேவையில்லை. 370 ரன்களை சேசிங் செய்யும் போது 100/3 என எதிரணி தடுமாறும் நிலையில் நீங்கள் இரக்கமற்றவர்களாக இருக்க வேண்டும். அதன்பின் அவருக்கு எதிராக இங்கிலாந்து அடித்த பெரும்பாலான ரன்கள் விக்கெட்டுக்கு பின்பகுதியில் எடுக்கப்பட்டதாகும். அது இங்கிலாந்துக்கு எதிராக அவர்கள் நேராக பந்துவீசவில்லை என்பதை எனக்கு காட்டியது. அவர்களது அந்தப் பந்துகளை ஜானி பேர்ஸ்டோ லெக் சைட் திசையில் எளிதாக அடித்து ரன்களை சேர்த்தார்”

- Advertisement -

“4-வது இன்னிங்ஸ்சில் ஒரு சுழல் பந்து வீச்சாளராக உங்களது அணிக்கு நீங்கள் வெற்றியைத் தேடித்தர வேண்டும். உங்களிடமிருந்து 2 – 3 விக்கெட்டுக்களை எதிர்பார்க்கிறோம். அது எதிரணிக்கு அழுத்தத்தை கொடுக்கும். லெக் ஸ்லிப் பீல்டர்கள் இல்லாமல் கால்தடம் பதித்த பிட்ச் பகுதியில் பந்துவீசி உங்களால் விக்கெட்டை வீழ்த்த முடியாது. எனவே இந்தியா அரௌண்ட் திசையில் பந்துவீசியிருக்க வேண்டும்”

இதையும் படிங்க : IND vs ENG : நாகரிகம் இல்லாமல் அம்பயரை ஸ்லெட்ஜிங் செய்த இங்கி வீரர் – அம்பயரின் நெத்தியடி பதில் இதோ

“பிட்ச் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமில்லை என்பது எனக்கு தெரியும். ஆனாலும் 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ள ஜடேஜா ஒரு உலகத்தரம் வாய்ந்தவர். எனவே நேரான லைனில் பந்து வீசி பேட்ஸ்மேன்களை பெரிய ஷாட் அடிக்க வைத்து விக்கெட் எடுக்க முயற்சித்து இந்தியாவுக்கு வெற்றியைத் தேடிக் கொடுக்க முயலுங்கள்” என்று கூறினார். 2-வது இன்னிங்சில் இதுவரை 15 ஓவர்கள் வீசியுள்ள ஜடேஜா ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement